பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிகலன்கள்

133


அந்தச் செம்புப் பாத்திரத்திற்கு உரிய முடியும் அகப்பட்டது. அம்மூடி கைப்பிடி கொண்டதாகக் காணப்படுகிறது.ஹரப்பாவில் ஆராய்ச்சி நடத்திய அறிஞர் வாட்ஸ் என்பார் பல நகைகளைக் கண்டெடுத்தார். அவற்றுட் பெரும்பாலன மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்தவற்றை ஒத்திருந்தன. சில எங்குமே காணப்படாத வேலைப்பாடு பொருந்தியவையாக உள்ளன. அங்குக் கிடைத்த நகைகளும் தரையின் அடியில் புதையுண்டு கிடந்தனவே ஆகும்.

காட்சிக்கினிய கழுத்துமாலை

வெள்ளிப் பாத்திரம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நகைகளுள் கழுத்து மாலை ஒன்றே சிறப்பித்துக் கூறத்தக்க வேலைப்பாடு கொண்டது. அது பொன்னாலும் பச்சைக் கற்களாலும் செய்த மணிகள் கோக்கப்பட்டு நீண்ட அணிவடமாகக் காட்சியளிக்கிறது. தங்க மணிகள் தட்டையாகச் செய்யப்பட்டு அவற்றின்மீது குமிழ்கள் பற்றவைக்கப்பட்டுள்ளன. கண்ணாடி போன்ற கடினமான பச்சைக் கற்கள் பீப்பாய் வடிவில் செய்யப்பட்டிருந்தன. ஒரு பொன்மணியும் அடுத்து ஒரு பச்சை மணியுமாக அம்மாலை கோக்கப்பட்டுள்ளது. அதன் நடுவில் ‘கடுத்தக்கல்’ என்னும் ஒருவகை வைடுரியத்தாலும், சூரிய காந்தம்’ எனப்படும் இரவைக் கல்லாலும் செய்யப்பட்ட ஏழு பதக்கங்கள் கோத்துத் தொங்கவிடப்பட்டுள்ளன. அதில் உள்ள பச்சைக்கல் வட பர்மாவிலும் திபேத்திலும் கிடைத்தலால், அவற்றுள் ஒன்றிலிருந்தே கொண்டுவரப்பட்டிருத்தல் வேண்டும்.[1]

மற்றும் இரு கழுத்து மாலைகள்

வேறொரு கழுத்து மாலையில் குழவி வடிவத்திலும் உருண்டை வடிவத்திலும் செய்யப்பட்ட தங்க மணிகளும், நீலப் பளிங்குக் கல்லாற் செய்யப்பட்ட மணிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அப்பளிங்கு மணிகளுட் சில இன்றும்


  1. Dr.E.J.H.Mackay’s ‘The Indus Civilization’, p. 109.