பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

மொஹெஞ்சொ - தரோ


கண்ணுள் வினைஞர்-சித்திரகாரிகள்; நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துவோர்’ என்னும் நச்சினார்க்கினியர் உரை” சுவைத்தற்குரியது. எனவே, ‘கண் எழுத்து’ என்பது, பார்ப்பவர் கண்ணுள் தொழிற்றிறமை காட்டி நிற்கும் எழுத்து’ எனப் பொருள்படும். கரந்தெழுத்து என்னும் ஒருவகை எழுத்தும் வழக்கில் இருந்த உண்மை சிந்தாமணியால் அறியத்தகும் (செ1767). இங்ஙனம் பல திறப்பட்ட எழுத்துகள் இருந்தன என்பதைத் தமிழ் இலக்கண நூல்கள் கூறிச் செல்வதால், இவை தமிழகத்தில் பெருவழக்கு உடையனவாக ஒரு காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவாம். மேலும், யாப்பருங்கல விருத்தி யுரையிற் காணப்பெறும் தன்மை முதலிய எழுத்து வகைகளைப் பற்றிய சூத்திரங்கள் யாப்பருங்கல விருத்தியாளர் காலத்திற்கு முற்பட்டனவாதல் வேண்டும்; இன்று தமிழகத்துள் கிடைத்துள்ள தமிழ்ச் சாஸனங்களில் அத்தகைய எழுத்துகள் காணப் பெறாமையாலும், அச் சாஸனங்களின் பழைய காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டாகலானும், கி.பி.7ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்திற்றான் அவ்வகை எழுத்துகள் தமிழகத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்று கோடல் பொருத்தமானது.

“கி.மு.3ஆம் நூற்றாண்டின என்று கருதத் தகும் தென் பிராமி சாஸனங்களில் உள்ள மொழி பிராகிருதமொழி கலந்த தமிழின் சிதைவாகத் தெரிகின்றது. அச்சாஸனங்கள், தமிழ் மக்கள் தனியே வழங்கிய லிபிகளும் பிராமி லிபிகளும் கலந்த எழுத்தமைதியும், பாகதமும் தமிழும் கலந்த பாஷை அமைதியும் உடையனவாகவே தோற்றுகின்றன. எனவே, ஆதித் தமிழர் தமக்கென்று அமைந்த எழுத்தமைதி உடையவர் என்பது தெளிவாம் ஆகவே, கடைச்சங்கத்தார் காலத்தினும் (கி.மு.400-கி.பி.200) அதற்கு வெகு காலத்திற்கு முன்னும் வழங்கிய எழுத்துகள் எல்லாம் சித்திர சங்கேத லிபிகள் (Hieroglyph) போன்றனவாதல் வேண்டும்...