பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி மக்கள் யாவர்?

237


அறிக்கைகளுடனும் - ஹரப்பா, மொஹெஞ்சொ-தரோ நகரங்களைப்பற்றிய விவரமான செய்திகளுடனும் ஒப்பிட்டுக் காண்க. மேலும், சிந்துவெளி நாகரிக காலம் கி.மு.3250 கி.மு.2750 என்பதனையும் ஆரியர் இந்தியா புகுந்த காலம் ஏறக்குறையக் கி.மு.2500 என்பதையும் நினைவிற் கொள்க. இக்குறிப்புகளால், ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்ட அநாரியர் சிந்துவெளி நாகரிகத்திற்கு உரியவர்களே - மொஹெஞ்சொ-தரோ, ஹரப்பா முதலிய பண்டை நகரங்களில் வாழ்ந்தவர்களே என்பது வெள்ளிடை மலைபோல் விளக்கமாதல் காண்க.[1]

ரிக் வேதம் கூறும் மாயாசாலங்களில் வல்லவர் - வாணிகம் செய்தவர் - பெருஞ்செல்வர்- தம் பகைவரான ஆரியரினும் சிறந்த நாகரிகம் உடையவர் . ஆனால், ஆரியரை வெல்ல இயலாதவர் (போதிய படைக்கலங்கள் இல்லாதவர்) சிந்து வெளி மக்களே என்பது தெளிவாகின்றது."மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த எலும்புகளில் இரண்டிற்குத் தலைகள் இல்லை. படை யெடுப்பினால் தலைகள் வெட்டுண்டன போலும் ! அந்நாகரிக நகரம் இறுதியிற் பாழானது: மக்கள் உடலங்கள் நாய், நரி, கழுகுகட்கு இரையாக விடப்பட்டன. இக்காரணம் பற்றிப் போலும் அந்நகரம், ‘இறந்தார் இடம்’ என்னும் பொருள்பட மொஹெஞ்சொ-தரோ எனச் சிந்தி மொழியில் வழங்கலாயிற்று!”[2]

‘ஹரப்பாவில் ஒரு புதை குழியில் ஒரே குவியலாகப் பல எலும்புக் கூடுகள் அகப்பட்டதை நோக்க, ஆடவர் பெண்டிர் குழந்தைகள் முதலியோர் படையெடுப்பில் கொல்லப்பட்டிருக்கலாம், தற்செயலாகக் கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது கொள்ளை நோயால் மடிந்திருக்கலாம். உண்மை தெரிந்திலது.[3]


  1. Mookerji’s Hindu Civilization’, pp. 29-33.
  2. Patrick Carleton’s Buried Empires’, pp.162-166.
  3. M.S.Vats’ ‘Excavations at Harappa’, p.202.