பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற மண்டலங்களின் புதைபொருள்கள்

51


எனவே, இராமனது சம காலத்தவராகிய வான்மீகி முனிவர் சொன்ன கி.மு.1000க்கு முற்பட்ட ‘அலைவாய்’ இருந்த இடம் எங்கே? என்பதை அறிஞர் தேடிப்பார்த்து, அவ்விடத்தை ஆராய்தல் அவசியமன்றோ? கொற்கை, முத்துக்குப் பெயர்போன பழம்பட்டினமாகும். இங்கிருந்துதான் வேதகால ஆரியர்க்கு முத்துக்கள் அனுப்பப்பட்டிருத்தல் வேண்டும்’ என்பர் திரு.பி.டி.சீனிவாச ஐயங்கார். எனவே, கொற்கையும் மிக்க ப்ழைமை வாய்ந்த பகுதியாகும்.

சேர நாட்டில் அரபிக்கடலில் துறைமுகப் பட்டினங்களாக விளக்கமுற்று இருந்தவை முசிறி, தொண்டி முதலியன. அங்கிருந்து உரோமப் பெருநாட்டிற்கும் பிற இடங்கட்கும் மிளகு, தந்தம், தேக்கு, அகில், வாசனைப்பொருள்கள் முதலியன ஏற்றுமதி செய்யப்பட்டன. சுமார் கி.மு.1000இல் வாழ்ந்திருந்த சாலமன் மன்னர்க்கு மயில் முதலியன அளித்த இடம் சேர நாடாகும். எனவே, இத்துறைமுகப் பட்டினங்களும் பழைமை வாய்ந்தனவே ஆகும். கொச்சி நாட்டில் அழிந்த நிலையில் உள்ள வஞ்சி மாநகரம் பழைய சேரர் தலைநகரமாகும். அது கி.மு.-விலேயே பெருஞ் சிறப்பு வாய்ந்த நகரமாக இருந்தது. அதனையும் அகழ்ந்து ஆராய்ச்சி புரிதல் நற்பலனை அளிக்கும். செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ள மஹாபலிபுரம் ஒரளவு பழைமை வாய்ந்த துறைமுகப் பட்டினம். அங்கு அரேபியாவிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன.

இவையெல்லாம் கி.மு.4 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே பெருஞ் சிறப்புப்பெற்ற பண்டை நகரங்கள் ஆகும். இவ் விடங்களில் விரிவான ஆராய்ச்சி நிகழ்த்தல் சிந்து வெளி ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிவதாகும்! தமிழகத்துப் பழைமையையும் கணிக்கப் பேருதவி புரிவதாகும்.

சங்கு சான்று பகரும்

சிந்து ஆற்றுப் பாய்ச்சல் பெற்ற பகுதிகளில் நிகழ்த்திய ஆராய்ச்சியிலிருந்து, அங்கு வாழ்ந்திருந்த மக்கள் சங்கைப்