பக்கம்:ரமண மகரிஷி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

61


தான் யார் என்பதை எவரிடமும் கூறாமலே இருந்து விட்டார்! அதெல்லாம் தேவையில்லை என்பது அவருடைய எண்ணம்.

வெங்கட்ராமய்யர் என்ற ஒரு தாசில்தார் அப்போது குருமூர்த்தம் வந்து பால சந்நியாசியைச் சந்தித்து தரிசனம் செய்து கொண்டார். பலதடவை முயன்று தோற்றுப்போன இந்த வட்டாட்சியர், இந்த தடவை யார் இந்த இளம் துறவி என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போகமாட்டேன் என்று அங்கே பிடிவாதமாக அமர்ந்து விட்டார்.

வெங்கட்ராமய்யர் தனது விருப்பத்தை வெங்கட்ராமன் எனப்படும் பிராமண சாமியிடமும் சொல்லிவிட்டு பிடிவாதமாக உட்கார்ந்து விட்டார். அப்போதுதான் அந்த வெங்கட்ராமன் சாமியார், ஒரு தாளில் ‘எனது ஊர் திருச்சுழி’ என்று எழுதிக் காட்டினார்.

இப்போது ரமணரிஷி என்ற பெயரை பெற்று விட்ட பாலயோகி, குரு மூர்த்தத்திற்கு வந்து ஏறக்குறைய இருபத்திரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. நாளுக்கு நாள் மக்கள் திரள ஆரம்பித்து விட்டார்கள். திருவண்ணாமலை ஓர் அருளாளர் தரிசனம் பெறுமிடம் என்ற பெயரைப் பெற்றுவிட்டது. ஆனால், அதிகரித்துக் கொண்டே போகும் பக்தர்கள் நெரிசலை எப்படிச் சமாளிப்பது என்பது சாமியார்கள் இடையே ஒரு பிரச்சினையாகி விட்டது.

குரு மூர்த்தத்திற்கு அருகே ஒரு பெரிய மாந்தோப்பு இருந்தது. அதற்குச் சொந்தக்காரராக இருந்தவர் பெயர் வெங்கட்ராம நாயக்கர். அவர் ஒரு நாள் ரமணரை சந்தித்து இங்கேயும் உங்களுக்கு இடையூறாகத்தான் இருக்கிறது. எனது மாந்தோப்புக்கே வந்து விடுங்கள். உங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறேன் என்று வேண்டிக் கொண்டார். நாயக்கரது வேண்டுகோளை ரமணர் ஏற்றுச் சென்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/63&oldid=1280785" இலிருந்து மீள்விக்கப்பட்டது