1
தட்டில் இன்னும் நாலைந்து கவளம் இருக்கையில் வாயிற் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்கிறது. மைத்ரேயி முற்றத்துக் குறட்டில்தானே சாப்பிட உட்கார்ந்திருக்கிறாள்? வெயில் இன்னமும் சுவரேறிப் போகவில்லை. மணி இரண்டடித்திருக்காது. அவளை அந்நேரத்தில் தேடிவந்து கதவை இடிப்பவர் யாராக இருக்குமோ?
அவசரமாக அள்ளிப்போட்டுக் கொண்டாலும் விழுங்க முடியவில்லை. அடிவயிற்றில் ஒரு உள்நாக்கு ஒட்டி, அது பழுப்பிலையாய்த் துடிப்பதுபோல் ஒரு அச்சம்.
ஒருகால் தபால்காரனோ? இந்த முகவரி யாருக்குமே தெரியாதே? கதவு தட் தட்டென்று பொறுமை குலைய ஒசைப்படுகிறது. மீதியுள்ள சோற்றோடு தட்டைச் சுவர் மறைவில் வைத்துவிட்டு பரபரப்புடன் வாளி நீரை எடுத்துக் கையைக் கழுவிக்கொள்கிறாள். பிறகு கையைத் துடைத்துக் கொண்டு கதவுத்தாழை மெள்ள நீக்குகிறாள்.
சினிமாக் காட்சிகளில் அதிர்ச்சியைக் குறிக்க ‘பாங்!’ என்று பேரோசைப் பின்னணியைத் தோற்றுவிப்பார்கள். அத்தகைய பேரோசையில் செவிகள் மூழ்கி ஊமையாகின்றன. கண்கள் நிலைக்கின்றன.
மறுகணம் மைத்ரேயி தலைகுனிய, பின்னே நகர்ந்து கொள்கிறாள். மாமா அந்த வாயிலையே அடைத்துக் கொண்டாற்போல் நிற்கிறார்.
வாரி முடித்த குடுமி, பஸ்ஸில் வந்ததனால் பிரிந்து பள பளப்பை இழந்திருக்கிறது. செவியில் பழைய நாளைய சிவப்புக் கடுக்கன் தொங்குகிறது. உளி பிடித்துச் செதுக்