பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

ரோஜா இதழ்கள்

பேர்...? அக்காவுக்கும் உங்களுக்கும் என்னைச் செருப்பாத் தச்சாப்பல நான் எண்ணிப்பேன்...”

அது நாடகக் காட்சியல்ல. அவளுக்குத் கீழே விழுந்து காலைத் தொடவேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் எண்சாண் உடலோடு உள்ளத்தையும் குழைத்துக்கொண்டு கெஞ்சுகிறாள்.

அவர் அவளைத்தொட்டு எழுப்பவேண்டாம்; குழந்தே. என்று குரல் கனியக் கூப்பிட்டுத் தேற்றவேண்டாம்.

“உன் அக்கா பிளட்பிரஷர் அதிகமாய் நர்சிங்ஹோமில் படுத்திருக்கா. நீ ஏற்கெனவே இந்த வீட்டுக்கும் அவளுக்கும் தேடிக்கொடுத்ததெல்லாம் போறும். மரியாதையா இப்பவே போயிடு. ஆமாம், போயிடு!”

குரல் இடிபோல் முழங்குகிறது. வாயிலைக் காட்டி அவர் வெருட்டுகிறார்.

“நீங்களே இப்படிச் சொல்லிட்டா நான் எங்கே போவேன்? எனக்குவேற யாரிருக்கா? நான் பழைய மைத்ரேயி இல்லே, அவ செத்துப்போயிட்டா...”

“சினிமாப் பேச்செல்லாம் இங்கே நம்பறதுக்கு யாருமில்ல. நான் இப்ப குளிச்சு சாப்பிட்டுட்டுத் துணிமணி எடுத்துண்டு கதவைப் பூட்டிக்காவலும் வச்சிட்டுப் போகப் போறேன். உன் அக்கா வந்தா வீண் கலவரங்களாகும். நீ இங்கே ஒரு நிமிஷம் கூட இருக்கக்கூடாது, போ...!”

“போ..!”

“போடின்னா, ஏன் அழுதுண்டுநிக்கறே? அன்னிக்கு எந்தத் தைரியத்திலே போனே ?”

“உங்கள் சொந்தப் பெண்ணே இப்படித் தப்புச் செய்தாள்னு பெரிய மனசு பண்ணி நினைச்சுக்குங்கோ அத்திம்பேர், எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கோ...” கல்லும் கரையும் வண்ணம் கதறி அழுகிறாள்.

“என் சொந்தப் பொண்ணானா அன்னிக்கே கிணத்திலே குளத்திலே பிடிச்சுத் தள்ளிட்டு நிம்மதியாயிருப்பேன்! சீ மூஞ்சில முழிக்க வெக்கமாயில்லே உனக்கு?”...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/72&oldid=1101889" இலிருந்து மீள்விக்கப்பட்டது