உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

கலைஞர் மு. கருணாநிதி


மதிப்புடையவன் அல்லன் என்பது அவள் முடிவு: தமிழ்ப் பண்பு கொண்டவனாக இருக்க முடியாது என்பதும் அவள் கருத்து. கரிகால் பெருவளத்தானையே அவள் தெய்வமாகக் கருதிவிட்டதால் அந்தத் தெய்வத்துக்கு எதிரிடையான யாரையும் அவள் பழி வாங்கிக் கொள்ளத் தயங்க மாட்டாள். தன் திட்டத்துக்குத் துணையாக வீரபாண்டியின் சந்திப்பு அமைந்ததையும் அந்தச் சந்திப்பு தன் வாழ்வில் புதிய சுவை எற்றிவிட்டதையும் நாட்டுத் தொண்டுக்காகத் தனக்குக் கிடைத்தபரிசு என்றே அவள் தீர்மானித்து அகமகிழ்வு கொண்டாள்.

மாளிகையின் முகப்பு நெருங்க நெருங்கத் தாமரை முத்துநகையைப் பார்த்துப் பார்த்துப் புன்னகை பூத்தாள். குதிரைகள் இரண்டும் அருகருகே வந்து கொண்டிருந்தன.

"இனிமேல் நமது கண்கள்தான் பேசிக் கொள்ள வேண்டும்!" என்றாள் தாமரை மெதுவாக!

"ஆமாம்! அதைத்தான் நான் அப்போதே சொன்னேன்" என்றாள் முத்துநகை.

"இந்த மாளிகை வெட்ட வெளியல்ல: இங்கே நாம் சந்திக்கக் கூடிய ரகசிய இடங்களும் இருக்கின்றன!" என்றாள் தாமரை.

இந்த வார்த்தைகள் முத்துநகையை ஒரு குலுக்குக் குலுக்கின!

"சரி சரி” என்று பேச்சை நிறுத்தச் சாடை காட்டினாள் முத்துநகை.

வாயிற்புறத்தில் குதிரைகளைக் கட்டிவிட்டுத் தாமரை முத்துநகையை அழைத்துக் கொண்டு நேரே அண்ணியிருக்கும் இடத்திற்குச் சென்றாள். அரசி பெருந்தேவி தன் படுக்கையில் இருந்தவாறே ஊமை மருத்துவனை வரவேற்று உட்காரச் சொன்னாள்.

"இவர்தான் என் அண்ணி, இந்த மாளிகையில் வாடும் இவர், வேளிர்குடியின் விளக்கு. இந்த விளக்கின் ஒளியை மங்கிவிடாமல் காப்பாற்ற வேண்டியதுதான் வைத்தியரான உமது பொறுப்பு!" என்றாள் தாமரை, முத்துநகையைப் பார்த்து.

முத்துநகை தலையை ஆட்டி ஆமோதித்தவாறு, அரசியின் கையைப் பிடித்து நாடி பார்க்க ஆரம்பித்தாள்.

"ஏம்மா தாமரை! ஊமையென்றாய்; காது நன்றாகக் கேட்கிறதே!" என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் பெருந்தேவி.

"இவர் பிறவி ஊமையல்ல அண்ணி! இடையிலே ஏற்பட்டது!" எனச் சமாளித்தாள் தாமரை. நாடி பார்த்து முடிந்த பிறகு ஆகாயத்தைப் பார்த்து