ரோமாபுரிப் பாண்டியன்
135
ஏதோ சிந்தனையில் இருந்துவிட்டு முத்துநகை இருக்கையை விட்டு எழுந்தாள்.
"என்ன வேண்டும் வைத்தியரே!" என்று கேட்டாள் தாமரை.
ஒன்றும் தேவையில்லை என்பது போல் சைகை செய்து விட்டு முத்துநகை, அங்குமிங்கும் உலவிக்கொண்டேயிருந்தாள், தலையைக் கீழே குனிந்தவாறு.
"பார்த்தீர்களா அண்ணி! எவ்வளவு தீவிரமாகச் சிந்திக்கிறார்!" என்று கேட்டு அண்ணியின் புன்சிரிப்பைப் பதிலாகப் பெற்று ஆறுதலடைந்தாள் தாமரை.
உலவிக் கொண்டிருந்த முத்துநகை ஓர் ஓலையை எடுத்து ஏதேதோ எழுதினாள். அதை அரசியிடம் கொடுத்தாள். அரசி பெருந்தேவி அதை வாங்கிப் படித்துப் பார்த்து விட்டுத் தாமரையிடம் தந்தாள்; "இந்த நோயை நிச்சயம் குணப்படுத்தி விடலாம். இதற்குச் சில முக்கியமான மூலிகைகள் வேண்டும். அதற்கிடையில் அரசரை நான் சந்தித்தால் பரவாயில்லை!" என்று அந்த ஓலையில் முத்துநகை எழுதியிருந்தாள்.
பெருந்தேவிக்கு இருங்கோவேள் மன்னன் முதலில் கூறிய மொழிகள் நினைவுக்கு வந்தன. "அரசர் மாளிகையில் இல்லை; எங்கேயோ போய்விட்டார் என்று மருத்துவனிடம் கூற வேண்டும்" என்று அவன் குறிப்பிட்டிருந்தான். அதனால் அரசி முத்துநகையிடம், "அரசரைப் பார்ப்பது என்பது இயலாத காரியம்; அவர் இங்கில்லை; எங்கே போனார் என்றும் தெரியாது; எப்போது வருவார் என்றும் சொல்ல முடியாது!" என்று உடனடியாகப் பதில் கூறி விட்டாள்.
முத்துநகை தாமரையின் முகத்தைப் பார்த்தாள். ஏனெனில் அரசன் அங்கிருப்பதாகத்தான் அவள் கூறி இருந்தாள். முத்துநகையின் குழப்பத்தைக் கண்ட தாமரை, கண் அசைத்து, "அரசி பொய் சொல்லுகிறாள்" என்பதை ஜாடையாக உணர்த்தினாள். முத்துநகைக்கும் ஒரு புதிய உற்சாகம் பிறந்தது. பகைவர் வீட்டுக்குள்ளேயே தனக்கு ஆதரவாக ஒரு கருவி கிடைத்திருக்கிறதே என்ற மகிழ்ச்சி எல்லை கடந்தது அவளுக்கு.
"மருத்துவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடம்மா, போ!" என்று அரசி தாமரையிடம் கூறினாள். தாமரை முத்துநகையை அழைத்துக் கொண்டு வேறு பக்கம் போனாள்; அங்கும் பெண்களே நிறைந்திருந்தனர். அவர்கள் எல்லாரும் முத்துநகையை உற்று உற்றுப் பார்த்து, தாமரையையும் ஓரக் கண்ணால் பார்த்துத் தங்களுக்குள் ஏதேதோ கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.