ரோமாபுரிப் பாண்டியன்
145
அதனால் என் சவத்தையும் இங்கேதான் எரித்துப் பொசுக்குவீர்கள்; அதற்குள் சில உண்மைகளைத் தெரிந்து கொண்டு தற்காலிகமாக மகிழ்வு கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். இந்தச் சிறு மகிழ்ச்சியையாவது நான் அடைவதில் தடையொன்றும் இல்லையே?"
அவன் பேச்சைக் கேட்கக்கேட்கத் தாமரையின் உள்ளம் உருக ஆரம்பித்தது. சாவைப் பற்றிய ஒரு நிச்சயத்துடன் இருக்கும் அவன் முகத்தில் அச்சத்தின் சாயல் அணுவளவும் தென்படாத ஓர் ஒளி வீசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவள் வியந்தாள்.
"நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?" என்று அன்பு குழைந்த தொனியில் கேட்டாள்.
"என்னைப்பற்றி ஒரு கதை சொல்கிறேன். கேள் முதலில்" என்று ஆரம்பித்தான். "ஒரு நாள் என் மன்னவர் பாண்டியன் பெருவழுதி என்னையழைத்து ஓர் அழகிய பெண்ணின் படத்தைக் காட்டி, 'இவள்தான் உனக்கு மனைவியாக வரப்போகிறவள்' என்று கூறினார். படத்தைப் பார்த்த நான் எந்த மறுப்பும் கூறவில்லை. என் சம்மதத்தைப் புரிந்து கொண்டார். பிறகு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளால் திருமணம் நடைபெறாமல் போய்விட்டது. அந்தப் படத்தில் நான் கண்ட அழகியை இதுநாள் வரையில் தேடிக் கொண்டேயிருந்தேன்; கிடைக்கவில்லை."
"அதற்கென்ன? இந்தக் கதை கேட்கவா என்னை உட்கார வைத்தீர்கள்?"
"கொஞ்சம் பொறு! நான் தேடிக் கொண்டிருந்த சமயத்தில்தான் சோழ பாண்டியர் நட்பு ஒப்பந்தம் நடைபெற்றது. அந்த விழாவின் போது ஏற்பட்ட நிகழ்ச்சியால் எனக்கு இந்த முடிவு ஏற்பட்டது."
"அதெல்லாம் தான் தெரியுமே, அதற்கென்ன?"
"நான் வாழ வேண்டும் - வளமாக வாழவேண்டும்- இன்பமாக வாழ வேண்டும் என்று நினைத்து எப்போது திருமணம் வரும் என்று ஏங்கிக் கிடந்த சமயம் அந்தச் சித்திரத்துப்பாவை என் கண்ணில் படவில்லை. அவளோடு காதல் மொழி பேசி இல்லறக் களி நடனம் புரிய வேண்டுமென்று நான் ஆயிரமாயிரம் மனக்கோட்டைகளைக் கட்டியலைந்தபோது, அந்த பேசும் புறா என் விழி வலையில் விழவில்லை.
என்னுயிரே - பொன் விளக்கே - மண்ணுலகில் இல்லாத பேரழகே - மாற்றுக் குறையாத தங்கமே! என்றெல்லாம் அவளைப் புகழ்ந்து பாடிப் பாடி எழுதி, அந்த ஓலைச்சுவடிகளை அடுக்கி அடுக்கி அவைகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, 'இத்தனையும் என் காதலியைப்