146
கலைஞர் மு. கருணாநிதி
பற்றிய காவியம்' என்று கூத்தாடிக் குடும்பம் நடத்த நான் கனவு கண்டபோது அவளை நான் காண முடியவில்லை. சாவு வா! வா! என்று கை காட்டி என்னை அழைக்கும் போது சாவூருக்குப் போகும் வழியில் என் சந்தனச் சிலையைக் காண்கிறேன். கண்ணீர் வடிக்கிறேன்!"
"அவளைக் கண்டீர்களா? எங்கே?. யார் அவள்....!"
"ஆமாம் கண்டேன். அன்றலர்ந்த செந்தாமரை முகம். ஆணிப்பொன் மேனி. அழகெல்லாம் ஒருசேர வடித்தெடுத்த வண்ணச்சிலை. மீன் என்பார் கண்ணை. இல்லை; தேன் கொள்ளும் வண்டு படுத்திருக்கும் அல்லி மலர் என்பேன்; இதழ் என்பார் அதரத்தை இல்லை; திறந்திருக்கும் குங்குமச் சிமிழ் என்பேன்! அந்த ஆரணங்கைக் கண்டு விட்டேன்- எழிலோவியத்தைக் கண்டு விட்டேன்!"
"எங்கே? யாரை?" தாமரை கோபமாகக் கேட்டாள்.
"இங்கேதான்! நீதான்! நீயேதான் நான் தேடியலைந்த நீலோற்பலம்! நித்திலம்! நிலவு!"
தாமரைக்குத் தூக்கிவாரிப் போட்டது.
அப்படியே சிலையாக மாறிப் போனாள். அவனுக்கு என்ன பதில் கூறுவதென்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் மனம் புண்படும்படிப் பேசக்கூடாது என்று மட்டும் அவள் முதலிலேயே முடிவு செய்திருந்தாள். அவன் தன்னைப் பற்றிக் கொண்டிருக்கும் எண்ணத்தை நினைத்து அவள் ஆத்திரப்படவில்லை. தன் அழகை வியக்கவும் தன்மீது விருப்பமுறவும் அவனுக்கு உரிமையிருக்கிறது. அதைத் தடுக்க அவளால் எப்படி முடியும்? ஒரு பெண்ணைப் பார்த்ததும் அவளிடம் ஓர் ஆண்மகன் தன் உள்ளத்தைப் பறிகொடுப்பது தவறில்லை. தன் கருத்தை அவளிடம் வெளியிடுவதிலும் தவறில்லை. இந்த நிலைமை எதுவரையில் போகலாம்... எதுவரையில் சரியாக இருக்கலாம் என்பதே பிரச்சினை. 'உன்னை நான் உயிரினும் மேலாக நேசிக்கிறேன்; என்னை ஏற்றுக் கொள்!' என்று கேட்கிற வரையில் தவறில்லை. நிச்சயமாகத் தவறில்லை. அவன் மொழி கேட்ட அந்தப் பாவையும் ஒப்புதல் உரை தந்துவிட்டால் பிறகு பேச்சே இல்லை
அவள் அவனை விரும்பாமல் மறுத்துவிட்ட பிறகும் அவன் தவறான வழியிலேயே அவளிடம் நடந்து கொள்ள முயன்றால், அங்கேதான் மனிதன் மிருகமாக மாறுகிறான். அந்த மிருகம் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும்.