உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

கலைஞர் மு. கருணாநிதி


திருந்தேன். இப்போது என் உறுதியும் காற்றில் பறந்துவிட்டது. யாரால் மன்னா? யாரால்? எல்லாம் தங்களால்தான்!"

கரிகாலன் புலவரையே பார்த்துக் கொண்டிருந்தான். வாய் திறக்கவில்லை.

"செழியனை மீட்கப் படையெடுப்புமுறை தேவையில்லை என்று நானே கூறினேன்; இப்போது நானே பாண்டியனின் திட்டத்துக்குத் தலை அசைத்தேன்."

கரிகாலனின் உதடுகள் அசைந்தன.

"ஏன்?"

“ஏன் என்றா கேட்கிறீர்கள் மன்னா? மிகவும் வேடிக்கைதான்! நமக்கு அறவே அக்கறையில்லை. பாண்டியராவது அவரது சொந்த முயற்சியில் வெற்றியைக் காணட்டுமே என்றுதான் அவர் விருப்பத்துக்கு இணங்கினேன்"

"பாண்டியனுக்கு என்மீது வருத்தம் அல்லது கோபம். அதனாலே என்னைக் கலந்து கொள்ளாமல் இருங்கோவேள் மீது படையெடுக்கிறார். இல்லையா?"

"அப்படியும் இல்லை. சோழ மன்னர் என்ன செய்வதென்று புரியாத நிலையில் குழப்பமடைந்து இருக்கிறார். போரில் வென்ற நாட்டைத் திரும்ப இருங்கோவேளிடம் கொடுத்து அதற்குப் பதில் ஒரு சாதாரண உயிரை மீட்பது என்பது முடியாத காரியந்தான். இந்நிலையில் சோழருக்குத் தொல்லை கொடுக்காமல் நாமே செழியனை மீட்க முயலுவோம் என்று துணிந்துவிட்டார். அவ்வளவுதான்!"

"அவசரக்காரர்!"

"அலட்சியத்தைவிட அவசரம் எவ்வளவோ மேல் என்பேன் நான்!"

"அலட்சியம் அவசரம் இரண்டுக்குமிடையே அமைதியோடு தெளிவான காரியங்களில் ஈடுபடுதல் என்ற குணமும் இருக்கிறது. புலவரவர்களே! தங்களுக்குத் தெரியாதவைகளையா நான் கூறப் போகிறேன்?"

"என்ன கூறினாலும் சரி; நம் நாட்டுக்கு வந்து நம் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் அல்லற்படும் ஒரு வீரனைப்பற்றிக் கவலைப் படாமல் இருப்பது பண்பே அல்ல! நல்லவர்களுக்கு அழகே அல்ல! இதற்குப் பெயர்தான் கடைந்தெடுத்த தன்னலம்!"

"போதும்! புலவரே, போதும்! இந்தக் கரிகாலனைத் தாங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. செழியனை மீட்பதற்காக நான்