ரோமாபுரிப் பாண்டியன்
177
எத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் என்பது தங்களுக்குத் தெரியாது. தாங்கள் இங்கு வரும்போது தங்களைக் கடந்து சென்றானே ஓர் இளம் வீரன். அவனைப் பார்த்தீர்களா?"
"ஆமாம் பார்த்தேன்"
"யார் அவன்?"
"ஒற்றன் என்றீர்கள் அன்று!"
"ஒற்றன் மட்டுமல்லன், காணாமற்போன உங்கள் மகள் முத்துநகையும் கூட!"
"ஆ! என்ன! என் மகளா! முத்துநகையா?"
"ஆமாம்! அவளைக் கேட்டுப் பாருங்கள்! செழியனை மீட்பதற்கு நான் எவ்வாறெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று. முத்துநகை மட்டும் குறுக்கிடாதிருந்தால் இருங்கோவேளின் தலை எப்போதோ கீழே விழுந்திருக்கும். உங்கள் மகள் அளித்த உறுதியின் பேரில்தான் செழியனை எப்படியும் தந்திரமாக மீட்டுவிடலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறேன். அதற்குள் அவசரப்பட்டு விட்டார் பாண்டியர்!"
"மன்னவா! எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என் மகள் எப்படி இங்கு வந்தாள்? காணாமற் போன என் கண்மணி இங்குதான் இருக்கிறாளா! நான் எவ்வளவு பேறு பெற்றவன்! ஆகா! என்னைப் போன்ற புகழுடையவன் யாருமே இருக்க மாட்டார்கள். இப்படியொரு நாட்டுப் பற்றுள்ள செல்வத்தையா நான் மகளாகப் பெற்றிருக்கிறேன்? அடடா! இந்த வார்த்தைகள் என் செவிகளில் செந்தேனாகப் பாய்கின்றனவே! அரசே! என்னை மன்னித்து விடுங்கள்! அவசரப்பட்டு, ஆத்திரத்தில் ஏதோ கூறிவிட்டேன்" என்று ஆனந்தக் கண்ணீர் பொங்க நின்றார் காரிக்கண்ணனார்.
"பரவாயில்லை புலவர் பெருமானே! தாங்கள் ஒன்றும் தவறு செய்து விடவில்லையே! மன்னரின் கடமையை எடுத்துரைத்தீர்கள்; அவ்வளவு தானே! எனக்கிருக்கும் வருத்தமெல்லாம் என் நண்பர் பாண்டியர் என்னைக் கலந்து கொள்ளாமல் இருங்கோவேள் மீது படையெடுத்து விட்டாரே என்பதுதான்!" என மிகக் கவலையுடன் கூறினான் கரிகாலன்.
"இல்லை மன்னா! தங்களுக்குத் தொல்லை தரக்கூடாது என்பதே அவர் எண்ணம். இருப்பினும் இப்போதும் ஒன்றும் முழுகிவிடவில்லை. தாங்கள் என்ன சொல்கிறீர்களோ அதன்படி அவரை நடக்கச் செய்வது என் பொறுப்பு!" என்று புலவர் கடமை உணர்ச்சியுடன் பதில் கூறினார்.