உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

கலைஞர் மு. கருணாநிதி


படுகிறீர்கள்; பகைவனுக்குத் துணை நிற்கும் ஒருவரை வெளியில் உலவிட விடுவது தவறல்லவா? அது அறிவுடைமையும் ஆகாது. அதனால் என்னை மன்னித்துக் கொள்ளவும். பெயர்தான் சிறைவாசம் என்று இருக்குமே தவிர தங்களுக்குத் தொல்லைகள் இருக்காது. நல்ல உணவு வழங்கப்படும். சிந்திக்கவும் எழுதவும் வசதிகள் உண்டு. செந்தமிழ்க் கவிதைகளைத் தாங்கள் எழுதிக் குவிக்கலாம். என் கடமையை நான் செய்ய வேண்டியிருக்கிறது. மன்னிக்கவும்."

என்று தழுதழுத்த குரலில் உரைத்துவிட்டு அசைவற்று நின்றான்.

"சிறைச்சாலையில் எனக்கு வசதிகளா, மன்னவா? கிளியை அடைக்கும் கூண்டு இரும்புக் கூண்டாயின் என்ன? பொன் கூண்டாயின் என்ன? அரண்மனையிலேயே சிறை வைப்பதால் என் பெருமை நிலைத்து விடுமா என்ன? துரோகியென்று நீங்கள் எல்லாம் கூறிவிட்ட பிறகு என்னைக் கொன்று போடுவதே சிறந்த தண்டனையாகும். எனக்கும் அமைதி ஏற்படும்." என்று புலவர் மறுமொழி பகன்றார்.

அவர் பேச்சில் நடுக்கமில்லை. கம்பீரமாகப் பேசினார். அரசன் அதற்குப் பதில் கூறவில்லை. வீரர்களை அழைத்து அவர்களிடம் சைகை செய்தான். அவர்கள் புலவரை அழைத்துக் கொண்டு புறப்பட்டனர்.

"வருகிறேன் மன்னவா! வாழ்க!"

- என்று வாழ்த்திவிட்டு வீரர்களுடன் கிளம்பினார் காரிக்கண்ணனார்.

எப்போதும்போல மன்னன் அவனையறியாமலே ஏழடி நடந்து சென்று, அதன் பின்னர், தான் நடந்து வந்ததை உணர்ந்து அப்படியே நின்று பொலபொலவென்று கண்ணீர் உகுத்தான்.

முத்துநகையின் கண்களும் அருவிகளாயின. அவள் அரசனிடம் வந்து "அரசே!" என்று கரகரத்த குரலில் அழைத்ததும், அரசனின் நெஞ்சம் வெடித்துவிடும் போல் ஆயிற்று; "என்னம்மா?" என்று அழுதவாறே கேட்டான்.

"என்னை மன்னித்து விடுங்கள்." - அவள் விம்மியழுதாள்.

"உன்னை மன்னித்து விடலாம். ஆனால், தமிழ்த்தாயை கதறி அழவிட்டு அவளது அன்புப் புதல்வரை அரண்மனையில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறேனே; அதற்கு நான் யாரிடம் மன்னிப்புக் கேட்பேன்?" என்று குழந்தைபோலச் செருமிச் செருமி அழத்தொடங்கினான், கரிகாலன். அவ்விருவரும் போட்டி போட்டுக் கொண்டு அழுது முடிந்த பிறகு முத்துநகை கரிகாலனிடம் சொன்னாள். "நான் போய் வீரபாண்டியைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று!