ரோமாபுரிப் பாண்டியன்
211
"அப்படியொரு ஒற்றன் பாண்டிய நாட்டில் இல்லையென்று நான் விசாரித்த வரையில் தெரிகிறது" என்று சோழன் பதில் கூறினான்.
"பாண்டிய மன்னரால் நியமிக்கப்பட்டவர்தான் அந்த ஒற்றர். தாங்கள் கேட்டவைகள் தவறானவைகளாக இருக்கக் கூடும். வீரபாண்டியைப் பற்றி வீண் சந்தேகம் ஏற்பட வேண்டிய அவசியமே இல்லை. அவருக்கு என்ன ஆயிற்று என்றும் தெரியவில்லை. அவரை நான் உயிரோடு பார்க்கப் போகிறேனா என்பதே சந்தேகந்தான்!" என்று கூறிவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தாள் அவள்.
வேதனைக் களத்தில் வீழ்ந்து கிடக்கும் அவளுக்கு மேலும் துன்பம் தர எண்ணாமல், அரசன் அவளைப் போகுமாறு கூறிவிட்டுத் துணைக்குச் சில வீரர்களையும் அழைத்துச் செல்லுமாறு கூறினான்.
"இல்லை! யாரும் தேவையில்லை. நான் தனியாகவே போய் வருகிறேன்- எனச் சொல்லிவிட்டு கரிகாலனிடம் விடைபெற்று முத்துநகை வீரபாண்டியைச் சந்திக்கப் புறப்பட்டுவிட்டாள். அரசரைக் கொல்ல வந்த இருங்கோவேளின் ஆள் கூறிய தகவலிலிருந்து தன் காதலன் உயிரோடு இருப்பான் என்ற நம்பிக்கையே அவளுக்கு இல்லை. அந்தச் சூழ்நிலையில் அவள் மனம் என்ன பாடுபடும்? பாழ் மண்டபத்தினருகிலோ, அல்லது அந்தக் குளத்திலோ தன் ஆசைக் காதலனின் பிணம் கிடக்கும் -அய்யோ! அதைப் பார்த்த பிறகு உயிர் நிற்குமா உடலில்! அப்படிப்பட்ட ஒரு கொடுமையான காட்சிதான் தன்னை வரவேற்கக் காத்திருக்கிறதா? அல்லது மரணத்தோடு போராடிக் கொண்டு ஆதரிக்க யாருமில்லாமல் அவதிப்படுகிற வீரபாண்டியைத் தான் அவள் காணப்போகிறாளா? அப்படியானால் காயம்பட்டு அலறித் துடிக்கும் அவனைத் தழுவிச் சிகிச்சை செய்து உயிர் கொடுத்து விட்டு மறுவேலை பார்க்கலாம் அவள்.
எண்ணங்கள் உந்தித் தள்ள ஓடிக் கொண்டிருந்தாள் பாழ் மண்டபம் நோக்கி.
முத்துநகை, தன் காதலனைத் தேடிச் செல்லும் அதே நேரத்தில் கானகத்தில் மரமாளிகையில் தன் அண்ணிக்கு அருகில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்தவாறு தாமரை, காதலில் தனக்கு ஏற்பட்ட விபரீதமான தோல்வியை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். 'பிற ஆடவரை மனத்தால் நினைத்தாலும் கற்புக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும் என்று கூறுவார்களே! அதுபோலத்தான் நம் கற்புக்கும் குறை வந்து விட்டதோ' என்று சந்தேகப்பட்டாள். அந்தச் சந்தேகத்தை ஒரு நொடியில் துடைத்து விட்டு அவளைச் சமாதானப்படுத்தியது அவளது மனச்சாட்சி. ஓர் ஆடவனிடம் மனத்தைப் பறிகொடுத்தால்