ரோமாபுரிப் பாண்டியன்
213
முடிவாக உணர முடிவதெல்லாம் செழியனுக்கும் முத்துநகைக்கும் நிச்சயம் ஏதோ ஒருவகைத் தொடர்பு இருக்க வேண்டும்; அந்தத் தொடர்பு, இருவரும் இருங்கோவேளின் பகைவர்கள் என்ற தொடர்பாக மட்டும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு சாதாரணத் தொடர்பு ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட வேண்டிய அவசியமுமில்லை. செழியன், அவளைக் காதலிக்கவில்லையென்று வலிந்து ஓர் ஆறுதலான முடிவுக்கு வந்தாலும், முத்துநகை நிச்சயமாகச் செழியனைக் காதலிக்கிறாள். அதனால்தான் அவனை விடுவிப்பதற்காகத் தன் உயிரையும் உதிர்ந்த சருகாக எண்ணிப் பகைவரின் குகைக்குள்ளே நுழைந்திருக்கிறாள். நுழைந்தவள் தன் காரியத்தைப் பார்த்துக் கொண்டு தொலைந்திருக்கக் கூடாதா? இந்தத் தாமரை தானா கிடைத்தாள் அவளுக்குக் கருவியாக? அட தெய்வமே! தாமரை இலையில் விழுந்த தண்ணீர்தான் முத்துப்போல உருண்டு ஓடி ஓடித் தவிக்கும், பார்த்திருக்கிறேன். இப்போது தாமரையல்லவா தவிக்கிறது?
இதற்குப் பழி தீர்க்காமல் விடக்கூடாது; அவளுடைய மனம் எரிமலையாக மாற வேண்டும். திரும்பிய பக்கமெல்லாம் குளவிகள் கொட்டுவதுபோல் அழவேண்டும் அவள்! எந்தக் காதலனை மீட்பதற்காக என்னைப் பைத்தியக்காரியாக ஆக்கினாளோ, அந்தக் காதலன் அவளுக்குக் கிடைக்காமல் போகும்படி செய்ய வேண்டும். அதற்கு வழி இங்கு சிறையிலுள்ள செழியனைத் தொலைத்துவிடுவதா? தொலைத்தால் அவளுக்கு வேதனை-துயரம்- இத்தோடு முடிந்துவிடும். அவனை உயிரோடு வைத்து அவனைக் கொண்டே அவளை அணு அணுவாகக் கொல்லவேண்டும். அவனுக்காக எவ்வளவோ இன்னல்களை ஏற்றுக் கொண்டும் கடைசியில் அவன் தன்னை ஏமாற்றி விட்டானே என்று அவள் துடித்துக் கதற வேண்டும்.
அதற்கு ஒரே ஒரு வழி செழியனை என்னுடையவனாக்கிக் கொள்வதுதான். என் மடியில் செழியன் சயனித்திருக்க வேண்டும். நான் அவனது சுருண்டு வளர்ந்த தலைமுடியை என் காந்தள் விரல்களால் வருடிக் கொண்டிருக்க வேண்டும். அந்தக் காட்சியை அவள் காண வேண்டும்; பதற வேண்டும்; 'பாவி! பாதகா! என்னை ஏமாற்றி விட்டாயே!' என்று செழியன் மீது அவள் பாய வேண்டும்; செழியன் அவளை எட்டி உதைக்க வேண்டும்; கலகலவெனச் சிரிக்க வேண்டும். 'ஆகா! இதுவன்றோ முத்துநகை! இவளா முத்துநகை? பெயரைப் பார் பெயரை!' என்று அவன் அவளை மேலும் மேலும் இகழ வேண்டும்; என்னைப் புகழ்ந்த அவன் வாயை நான் என் இதழ்க் கதவுகளால் சாத்திட வேண்டும். அங்கு அதற்கு மேல் நிற்க முடியாமல் அந்த ஏமாற்றுக்காரி கோவெனக் கத்திக் கொண்டு ஓட வேண்டும்; இப்படிப் பழி தீர்த்துக்