ரோமாபுரிப் பாண்டியன்
215
"அய்யோ, இதைச் சத்தம் போட்டுச் சொல்லாதே! அவர் கேட்டுக் கொண்டு வந்தாலும் வருவார். சோழரைப் பழி தீர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வாழ்க்கை இலட்சியமே இல்லையென்பதுதான் உன் அண்ணனின் முடிவு. அதற்காகவே அவர் உயிர் வாழ்வதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்!"
"நிறைவேறக் கூடிய இலட்சியமா அண்ணி அது?"
"என்னைக் கேட்டால் நான் எப்படிக் கண்ணே பதில் கூறுவேன்? அவரைத் தடுக்க நாம் யார்? அப்படித்தடுக்கும் முயற்சியில் வெற்றி பெற இயலவில்லையென்பது உனக்குத் தெரியாதா என்ன? அம்மா தாமரை! நான் ஒன்று சொல்லுகிறேன் கேள்! நான் இன்னும் அதிக நாள் உயிர் வாழப் போவதில்லை!"
"அய்யோ! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள், அண்ணி!"
"நானே உணர்கிற உண்மையைச் சொல்லக்கூடாதா? என் உடலையும் உயிரையும் அனேகமாக நோய் அரித்துத் தின்றுவிட்டது. உன் அண்ணனின் இலட்சிய முடிவைப் பார்க்காமல் நான் செத்தாலும் செத்துவிடக்கூடும். தப்பித் தவறிச் சாவதற்குச் சிறிது தாமதமானால் கொஞ்சம் உடம்பில் தெம்பு வந்தாலும் போதும்; உன் அண்ணனின் இலட்சியம் ஈடேற என்னால் ஆன பங்கைச் செலுத்தவே விரும்புகிறேன். என் எண்ணம் ஈடேறாமல் நான் போய் விட்டால், நான் சொல்வதை நீ கட்டாயம் கேட்கவேண்டும்! கேட்பாயா தங்கமே?"
"கேட்கிறேன் அண்ணி, சொல்லுங்கள்!"
"சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தவர் என் ராஜா. கவலைகள் அவரைத் தொட்டது கிடையாது அப்போது! முகத்திலே சிந்தனை ரேகைகள் படர்ந்து நான் கண்டது கிடையாது அன்று ஆனால் இன்று அவர் கவலைகளின் உறைவிடமாகிவிட்டார். நான் ஒன்று கேட்டால் அவர் ஒன்று சொல்கிறார். எங்கேயோ சிந்தனை, எதைப் பற்றியோ நினைவு. தொல்லைகளில் உழலும் அவருக்கு எள்ளளவு அமைதி வழங்கவும் இந்தப் பாவிக்குக் கொடுத்து வைக்கவில்லை நான் போன பிறகு அவருக்கு என்னைப் பொறுத்த வரையில் நிம்மதிதான். ஆனால் இலட்சியத்தைப் பொறுத்தவரையில் அவருக்கு அமைதி ஏற்படவும் - வெற்றி கிட்டவும் நீ தான் அவருக்கு உதவியாக இருக்க வேண்டும். அண்ணன் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசக்கூடாது. இழந்த பொன்னாட்டை மீட்பதற்கும். இலட்சிய வெற்றி காண்பதற்கும் அவர் படும் கஷ்டங்களின் பயன் அத்தனையையும் நீதானே அனுபவிக்கப் போகிறாய்? உன்