266
கலைஞர் மு. கருணாநிதி
266 கலைஞர் மு.கருணாநிதி பகைவனைத் தந்திரமாகச் சிறை பிடிக்க வேண்டுமென்பதற்காகவே சோழ மன்னன் இப்படியொரு அழைப்பு விடுத்திருக்கிறான் என்று அவள் தீர்மானித்தாள். அண்ணனை எப்படியாவது தடுத்தாக வேண்டும்; அதற்கு என்ன வழியென்று ஏனைய மந்திரி பிரதானியருடன் யோசித் தாள். அண்ணன் எங்கே இருக்கிறான் என்பது தெரியாதபோது அவ னைச் சந்திப்பது என்பது எப்படி முடியும்? இவனைத் தடுக்கத்தான் வழி என்ன? யாரும் நல்ல முடிவு எதுவும் சொல்லத் தெரியாது திகைத்தனர். இழந்த நாட்டைப் பெறவேண்டும் என்ற உயரிய இலட்சியத்தோடு தங்கள் தலைவனின் பின்னால் நடந்து வந்த அவர்களுக்கு எத்தனையோ ஆபத்துக்கள் இதுவரை நேர்ந்திருக்கின்றன. காட்டு மிருகங்களின் கோரப் பற்களுக்குத் தங்கள் குடும்பத்தவரில் பலரைக் காணிக்கையாக்கி இருக்கிறார்கள். திடீரென்று பரவிய தொத்து நோய்கள் கொத்திச் சென்றிருக்கின்றன, சிலரது உயிர்களை. இத்தனை தொல்லைகளையும் சிரித்த முகத்தோடு சந்தித்தவர்கள் அவர்கள், "என்றேனும் ஒரு நாள் இந்த இடர்ப்பாடுகள் விடை பெற்றுச் செல்லும்; அரியணையிலிருந்து விரட்டப்பட்ட அரசன் மீண்டும் மணிமுடிசூடும் காலம் தூரத்தில் இல்லை”- இந்த நினைவுதான் அவர்களிடம் அண்டி வந்த சோர்வையும் சோகத்தையும் விரட்டிக் கொண்டிருந்தது. ஆனால் இன்று அவர்களைத் தேடி வந்த இந்த வேதனையான செய்தி அவர்கள் நெஞ்சிலே பெரும் புயலையே கிளப்பிவிட்டது. அந்தப் புயலிலே சிக்கிய துரும்புபோல் துவண்டு கொண்டிருக்கும் தாமரைக்கு அவர்களால் ஒரு வழியும் காட்ட முடியவில்லை. தாமரை யோசித்தாள். அண்ணியின் அவல முடிவு அண்ணனின் செவிகளில் பட்டிருக்காது என்பது என்ன நிச்சயம்? இரவைப் பகலாக்கி வனாந்திரத்திலே உலவிக் கொண்டிருக்கிற அவன் இச்செய்தி கேட்டு அடிபட்ட வேங்கையாகிவிடமாட்டானா? அண்ணியின்மறைவு அவன் இரத்தத்திலே புதிய கொதிப்பையே உண்டாக்கி இருக்குமே! "நான் ஆண்ட நாட்டைக் கவர்ந்து, என் நல்வாழ்வை அபகரித்துப் பல்பிடுங்கப் பட்ட பாம்பாக என்னைத் திரியவிட்டது போதாதா? இன்று எனது வாழ்க்கைத் துணைவியின் உயிரையும் குடித்துவிட்டதே சோழப் பேரரசு!" என்று அவன் வெஞ்சினம் கொண்டிருந்தால்.... உடனே சோழன் அரண்மனையை நோக்கி ஓடியிருந்தால்? ஐயோ!. அதை நினைத்துப் பார்க்கவே முடியாது. தாமரையின் மெல்லிய இதயம் சக்தியற்றுத் தள்ளாடியது! அண்ணனும்கூடச் சோழன் அரண்மனையில் சிக்கியிருக்கலாமோ!