282
கலைஞர் மு. கருணாநிதி
282 கலைஞர் மு. கருணாநிதி அருங்கோவேள் மன்னன் வந்தால் என்ன பதில் சொல்லுவது? 'செழியன் எங்கே?' என்று சிங்கநாதம் செய்கின்ற நேரத்தில் அமைச்சராகிய அவர் என்ன விளக்கம் தர முடியும்? இழந்த நாட்டை மீட்கப் 'பணயப் பொருளாக' அல்லவா அவன் செழியனைப் பயன்படுத்தக் கருதினான்? 'சிறகை ஒடித்துப் பறவையைக் கொடுத்தேன்; அதையும் பறக்க விட்டுவிட்டு நிற்கிறீர்களே! இங்கிருந்த பாதுகாப்பெல்லாம் பாழ்பட்டுப் போயிற்றா? அல்லது கொஞ்ச நஞ்சம் இருக்கிற என் மானத்தையும் போக்கி விடுவதுதான் உங்கள் எண்ணமாக ஆயிற்றா?' என்று தோல்வியால் புண்ணாகிக் கிடக்கின்ற இருங்கோவேள் புலம்பத் துவங்கிவிட்டால் என்ன செய்வது? செந்தலையாரின் இருதயம் அடுப்பு உலைபோல் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. தாமரை, செழியன் இருவரும் சென்ற குதிரைகள் மிக விரைவில் பூம்புகாரை அடைய வேண்டுமென்ற நோக்கத்துடன் நாலுகால் பாய்ச்சலில் சென்று கொண்டிருந்தன. தனக்கு இணையாகத் தாமரையும் குதிரைச் சவாரி செய்திடும் காட்சி கண்டு செழியன் வியப்படைந்தான். சிறிது தொலைவு காட்டைக் கடந்ததும் தங்களுக்குப் பின்னால் ஏராளமான குதிரைகள் வரும் குளம்படிச் சத்தம் கேட்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் குதிரைகளை ஓட்டத் தொடங்கினர். இருங்கோவேள் மன்னனின் குதிரைப் படைகள் அந்தக் காட்டையே அழிப்பதுபோல் வெள்ளமென வந்து கொண்டிருந்தன. செழியனையும் தாமரையையும் தேடி! முத்துநகையைச் சந்தித்துக் காதல் கொண்ட அருவியைத் தன் குதிரை கடந்து கொண்டிருப்பதைப் பார்த்துத் தாமரை சிந்தனையை எங்கேயோ செலுத்தினாள். அது ஒரு கணம்தான்: அதற்குள் பின்னே வரும் குதிரைப் படையின் ஒலி, அவளை வேகமாகத் துரத்திடத் தொடங்கியது. தாமரை! படைகள் அருகே வந்துவிட்டன. இன்னும் வேகமாக...!" என்று கூவியவாறு குதிரையில் பறந்து கொண்டிருந்தான் செழியன். தாமரையும் தன் குதிரையைக் கடுவேகமாக விரட்டும் முயற்சியில் தீவிரங்காட்டினாள். சிறு சிறு பாறைகளை யெல்லாம் அலட்சியமாகத் தாண்டியும், ஏறியும் கடந்து சென்று கொண்டிருந்த தாமரையின் குதிரை, ஒரு குழியில் காலை விட்டுத் 'தடா'ரென்று கீழே விழுந்தது. விழுந்த ஒலி கேட்டுச் செழியன் ஓடி வந்தான்.