286
கலைஞர் மு. கருணாநிதி
286 கலைஞர் மு. கருணாநிதி வாயிற்காப்போனிடம் சென்று வணங்கினான். வாயிற் காப்போன் அவனருகே வந்து தனது வலுத்த மீசையைத் தடவிக் கொண்டே விவரம் விசாரிக்கலானான். செழியன் வாயிலோனிடம் விளக்கமுரைத்திடத் தொடங்கினான், 46 'இதோ வந்திருப்பவர்கள் இருங்கோவேள் மன்னரின் தங்கை தாமரைச் செல்வியார் ஆவார்கள். அண்ணனின் துணைவி வேளிர்குல அரசி பெருந்தேவியாரின் மறைவு கேட்டு ஓடி வந்திருக்கிறார்கள். இருங்கோவேள் மன்னர் கோட்டையில் இல்லாத காரணத்தாலும், அவர் எங்கு சென்றுள்ளார் எனத் தெரியாத காரணத்தாலும் அவருக்கு அரசி இறந்த செய்தி அறிவிக்கப்படவில்லை. அதனால் இளவரசி தாமரைச் செல்வியார் மட்டும் அரசரின் நிபந்தனைக்கு உட்பட்டுத் தன்னந்தனியாக வந்துள்ளார்கள். அவருக்குப் பாதுக்காப்பாக நான் வந்திருக்கிறேன். இந்தச் செய்தியை மன்னருக்கு தெரிவித்து எங்களை அரசியாரின் சவம் இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுகிறோம்!" வாயிலோன் செழியனின் வேண்டுகோளைக் கேட்டதும் திகைப்புற்றுத் தாமரையை மாறி மாறிப் பார்த்துத் தனக்குத்தானே வியந்து கொண்டான். இருங்கோவேள் எனும் கொடுமைக்காரனுக்கு இப்படியொரு சாதுவான தங்கை இருக்கிறாளா? - என்று வாயிலோன் சந்தேகப்பட்டான். மன்னரிடம் தகவல் உரைப்பதாக கூறிவிட்டு அவன் கோட்டைக்குள்ளே ஓடினான். செழியனும் தாமரையும் கோட்டைக்கு வெளியே உள்ள ஓர் உயர்ந்த மண்டபத்துப் படிகளில் அமர்ந்து கொண்டனர். உள்ளே சென்ற வாயிலோன் எப்போது வருவானோ - வந்து என்ன பதில் கூறுவானோ என எண்ணியபடி இருவரும் கோட்டை வாயிலைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தனர். கோட்டைக்குள் சென்ற காவலன், கரிகால் மன்னனைத் தேடியலைந்து கடைசியில் அவன் வளவன் படுத்திருக்கும் மாளிகையில் இருப்பதாக அறிந்து அங்கே சென்றான். உழவர் குடிமகன் வளவனின் அருகேயிருந்த கரிகால் சோழன் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தான். வளவனுக்கு உடல்நிலை சரியாக வரும்போது திடீரென ஆபத்தான மாறுதல் தோன்றியதாகச் செய்தி வந்து, கரிகாலன் அவன் இருந்த இடத்துக்கு வந்திருந்தான். "குணமான பிறகு மயக்கம் வருவதற்குக் காரணமென்ன?" என்று அரசன், மருத்துவர்களைக் கேட்டான். "வளவனின் உள்ளத்தில் ஏதோ கவலை சூழ்ந்திருக்கிறது; அதன் எதிரொலிதான் இந்தத் திடீர் மாறுதலே தவிர, உடல் நிலையில் எந்தக் கோளாறும் இல்லை!" என்று மருத்துவர்கள் கூறினார்கள்.