உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

289


ரோமாபுரிப் பாண்டியன் <1 289 "கரிகால் மன்னரைக் காப்பாற்ற - கரிகால் மன்னரின் கொள்கையை எதிர்ப்பது குற்றமாகாது!" என்று அவன் தன் செயலுக்கு விளக்கமுரைத்து எழுந்து விட்டான். காலையில்தான் முளைத்தான். மக்களின் எழுச்சி, மாலை நேரத்திற்குள் அவனைத் தலைவனாக்கிவிட்டது. கரிகால் மன்னரைக் காப்பாற்றியாக வேண்டும். இருங்கோவேள் குடும்பத்தாருக்குத் தரப்படும் மரியாதையால் நாட்டுக்கு ஏற்படும் அவமானத்தைத் துடைத்தாகவேண்டும். இந்த இருபெரும் இலட்சியங்களை முன் வைத்து மக்கள் படையைத் திரட்டிவிட்டான் அந்தத் திறமைமிகுந்த தலைவன். அவன் பெயர் கோச்செங்கணான். அந்தப் பெயர் திடீரென ஒரே நாளில் பரவிவிட்டது. அவன் நாவன்மையால், மக்கட் பெருவெள்ளம் பொங்கி எழுந்து விட்டது; அவனது அயராத உழைப்பால்! அலைமோதி நிற்கும் அந்த மக்கட் கூட்டத்தைத் தேக்கி வைத்து வீணாக்கிவிடாமல் உடனடியாகச் செயல்பட வேண்டுமென்று அந்தப் புதிய தலைவன் துடித்தான்; அதற்கான திட்டமொன்றையும் தயாரித்தான். அந்தத் திட்டம் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. தீப்பொரி யெனக் காட்சி தந்தவர்கள் அவன் திட்டத்தை வெளியிட்டதும் தெளிந்த நீரென அமைதியாகக் காரியமாற்றத் தொடங்கினர். திட்டம் பற்றி ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால்கூட ரகசியங்கள் வெளிப்பட்டு விடுமென்று அஞ்சி வாய்மூடி மௌனிகளாக மக்கள் கலைந்து சென்றனர். ஒரே இடத்தில் நின்று உரத்த குரலில் அவன் திட்டத்தை ஒலிபரப்பவில்லை. ஏழெட்டுத் துணைத்தலைவர்களிடம் காதில் ரகசியமாகக் கூறினான். அவர்கள் மற்றவர்கள் காதில் திட்டத்தைப் போட்டார்கள். சற்று நேரத்தில் ஒருவர் காதில் ஒருவர் பேசத் தொடங்கினர். திட்டத்தை ஆதரிப்பதாக அனைவரும் கரங்களை உயர்த்தினர். திட்டத்தைக் கேள்வியுற்றதும் ஊமையாகி விட்டவர்களைப் போல அந்த இடத்தினின்றும் வேகமாக அகன்றனர். அவர்கள் முகத்திலே புதியஒளி தோன்றியது. கவலை ரேகைகள் மறைந்து விட்டன. நடையில் தெம்பு காணப்பட்டது. தன் முயற்சி வெற்றி பெறும் என்ற திருப்தியுடன் கோச்செங்கணான் புன்னகை புரிந்தான். கோட்டைக்கு வெளியே திரண்டெழும் மக்கள்சக்தி பற்றிய விவரம் எதுவும் கேள்விப்படாத மன்னன் கரிகாலன், வேளிர்கால இளவரசியை வரவேற்று உபசரிப்பதற்காக அரசி பெருந்தேவியின் சடலம் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குப் புறப்பட்டான்.