288
கலைஞர் மு. கருணாநிதி
288 கலைஞர் மு. கருணாநிதி பகைவனுக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் தேவைக்கு மீறிய மரியாதை கொடுத்துவிட்டார் மன்னர் என்ற குற்றச்சாட்டு, பரவலாகப் பயணம் நடத்திக் கொண்டிருந்த வேளையில், தாமரை அரண்மனைக்குள் அழைத்துச் செல்லப்பட்டாள் என்ற தகவல், மேலும் மக்களிடையே அதிருப்தியைத் தூண்டக் காரணமாகி விட்டது. சரியாகவோ தவறாகவோ அதிருப்தியாளர்கள் வளர வளர அவர்கள் மத்தியிலே அவர்களை நடத்திச் செல்லும் தலைவன் ஒருவன் தோன்றிவிடுவான் என்பதுதானே வரலாறு! அதற்கேற்பப் பூம்புகார் நகரத்தில் கொந்தளித்துக் குமுறிக் கொண்டிருந்த மக்களிடையேயும் ஒரு தலைவன் கிளம்பி விட்டான். அவன், சிதறிக் கிடந்த அதிருப்தியாளர்களையெல்லாம் வெகு விரைவில் ஒன்று சேர்த்துவிட்டான். அவன் பேச்சு, கவலையால் துவண்டு போனவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வல்லமை கொண்டதாய் இருந்தது: அவன் உருவம் மற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாய் அமைந் திருந்தது. அவனது கடைசி மூச்சுப் பிரியும்போது கூடக் கரிகால் மன்னருக்காகப் பணிபுரிவதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டி ருப்பான் என்று பெருமக்கள் அவனுக்குப் பாராட்டுரை வழங்கினர். தலைநகரத்து மூலைமுடுக்குகளில் எல்லாம் அவன் தலை தெரிந்தது, குரல் கேட்டது, மக்களின் ஆத்திர உணர்ச்சிக்கு அமைதியான முறையில் வேலிகட்டிக்கொண்டிருந்த முதியவர்கள் எல்லாம் தங்கள் முயற்சி சரிந்ததாக எண்ணி மூலையில் ஒடுங்கினர். "கொலைகாரியின் பிணத்துக்கு ராஜமரியாதைகளா? கடைசித் தரிசனம் காண்பதற்குப் பழிகாரனுக்கு அழைப்பா? எதிரியின் தங்கைக்கு அரண்மனையில் வரவேற்பா? இவையென்ன நாடாளும் மன்னரின் கோட்டைக் கொத்தளங்களா? அல்லது காடாளும் முனிவர்களின் ஆசிரமக் குடிசைகளா? அறநெறி தேவையானதுதான்! அது மக்களைக் கோழையாக்குகிற அளவுக்குத்தேவையா? நாட்டைப் பகைவனிடம் காட்டிக் கொடுக்கிற அளவுக்குத் தேவையா? துரோகிகளுக்கு இடம் தருகிற அளவுக்குபோதிக்கப்படும்அறநெறி, தற்கொலைக்காகத்தயாரிக்கப்படும் நஞ்சோடு ஒப்பிட வேண்டிய ஒன்றாகும். கொடியவனின் தங்கை. கோட்டைக்குள்ளே நுழைந்து விட்டாள்! இருங்கோவேளும் திறமைசாலி தான். முதலில் மனைவியை அனுப்பினான். இப்போது தங்கையை அனுப்பியிருக்கிறான். இத்தகைய சூட்சுமத்தைக் கூடப் புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு ராஜமரியாதை கொடுக்கப்படுகிறதென்றால் இதை நாம் எதிர்த்தே தீர வேண்டும்!" என்று அந்தத் தலைவன் முழங்கினான். “ஆமாம்: எதிர்த்தே தீர வேண்டும்!' என்று மக்களும் முழங்கினார்கள்.