ரோமாபுரிப் பாண்டியன்
307
ரோமாபுரிப் பாண்டியன் 307 வைக்க நீ பூம்புகாருக்குப் புறப்படும்போது உன்னோடு நானும் வருவேன். உன்னுடைய பாதுகாப்புப் படை வீரனாக வருகிறேன்; என்னை யாரும் அடையாளம் தெரிந்து கொள்ளாதபடி உன்னைப் பாதுகாக்கும் வீரனைப் போலவே நடித்து விடுகிறேன். உன்னை மோசம் செய்துவிட்டு நழுவிடப் பார்க்கிறேன் என்று உனக்குக் கடுகளவு சந்தேகம் வந்தாலும் உடனே கட்டாரியை என் மார்பின் மீது வீசிவிடு!" செழியன் அப்போது இப்படி கூறியது உண்மை! "என்னை ஏமாற்றுவதற்கு திட்டம் வகுக்கிறீர்களென்றால் பூம்புகார் அரண்மனையில் தாங்கள் தப்பியோட முனையும்போது என்னைக் கொன்று போட்டுவிடுங்கள். இல்லாவிட்டால் என் அண்ணனுக்குப் பதில் சொல்ல நான் உயிரோடிருந்து வேதனைப்படுவேன்" என்று தன் நிலையை விளக்கிய தாமரையை இப்படி மோசம் செய்யலாமா என எண்ணினான் செழியன். 'தாமரை, என்னை நம்பு. உதவி செய்தவர்களுக்கு துரோகம் செய்வது தமிழினத்து வழக்கமல்ல என்பது தெரிந்தும் என்னைச் சந்தேகப்படலாமா? உன்னைப் பாதுகாக்கும் வீரனாக வரும் நான், என் சகோதரியின் பிணத்தைப் பார்த்ததும் பாச உணர்ச்சி பீறிட்டுக் கிளம்பிவிடாமல் என் இதயத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். அரசியின் பிரிவு கண்டு படைவீரனுக்கு ஏற்படும் வேதனையை மட்டுமே என் முகத்தில் காண்பாய். இப்படி உறுதி கூறியது உண்மைதான். ஆனால் நாட்டுக்கும் அரசனுக்கும் ஆபத்து என்பதையும் செழியனின் தன்மான இதயம் நோக்கிற்று. மனப்போராட்டங்களுடன் செழியன் புகுந்து மறைந்து விட்டான். அதைக் கவனிக்காமலேயே இளவரசி விழிகளை அங்குமிங்கும் சுழலவிட்டவாறு மந்திரி பிரதானிகளுடன் போய்க் கொண்டிருந்தாள். கூட்டத்திற்குள் தந்திரமாக நுழைந்து ஒரு மண்டபத்தின் பக்கம் ஒதுங்கி நின்று கொண்டான் செழியன். அப்போது அவன் மனம் பட்ட பாட்டை விவரிக்க வொண்ணாது. தாமரை தன்னைக் 'கயவன்' என்று முடிவு கட்டி விடுவாளோ என்ற அச்சம் அவனைப் பிடித்தாட்டியது. எப்படியும் அவளுடன் போய்ச் சேர்ந்து கொள்ளலாம் என்ற முடிவுடன் அவன் மண்டபத்துக்குள் பதுங்கிக் கொண்டான். பெருந்தேவியைப் புதைத்த இடத்தில் இப்போது யாருமே இல்லை. ஒரே அமைதி! படைவீரர்களும் பரிவாரங்களும் புடைசூழ இருந்த தன்னுடைய அருமை அக்காள், தன்னந்தனியாளாக மண்ணுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் அந்தக் காட்சியை இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்; அவன் பார்வையை வேறு பக்கம் திருப்பக் கூடிய மற்றொரு காட்சி!