308
கலைஞர் மு. கருணாநிதி
308 கலைஞர் மு. கருணாநிதி அந்த நிம்மதியான இடத்தை நோக்கி வெகு தொலைவிலேயிருந்து ஒருமனிதன் நடந்துவந்து கொண்டிருந்தான். செழியன் கண்களை அகலத் திறந்து பார்த்தான். யார் அவன்? வளவனேதான். அவன் மெல்ல மெல்ல நடந்து வந்து பெருந்தேவியின் கல்லறை அருகே நின்றான். சுற்றுமுற்றும் பார்த்தான். இப்போது அவனைச் செழியனால் நன்றாகக் கவனிக்க முடிந்தது. அவன், கல்லறைக்கருகே உட்கார்ந்து தலை குனிந்தான். அவன் கண்களிலேயிருந்து நீர்முத்துக்கள் கொட்டிக் கல்லறையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தன. அவன் வாய் அசைந்தது. "தேவி! எனக்காகவே வாழ்ந்து எனக்காகவே உயிர் கொடுத்து விட்டாயா? இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவன் யார் என்று செழியனுக்குப் புரிந்துவிட்டது. சோழநாட்டுக்கு ஆபத்து நிச்சயமாக வந்துவிட்டது என்று அவன் நடுங்கினான். தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு கல்லறையின் பக்கம் காதைத் திருப்பினான். "என் இதய ராணி! நாலு பேர் அறிய உனக்காகக் கண்ணீர் வடிக்கக்கூடிய பாக்கியத்தைக்கூட எனக்களிக்காமல் பறித்துக் கொண்டாயே; இது நியாயமா? காட்டு மாளிகையில் இறந்தால் இதுபோன்ற ராஜமரியாதைகளை நடத்துவதற்கு எனக்குத் தகுதியில்லை என்று நினைத்துத் தானே இங்கு வந்து சாவைத் தழுவிக் கொண்டாய்? உன் செயலால் எனக்கும் கரிகாலனுக்கும் ஏதோ ஒரு தொடர்பை ஏற்படுத்திவிட்டாய். அவன் என்னை நேசிக்கிறான்; அன்புகாட்டுகிறான்; மரியாதை செலுத்து கிறான்; ஏழை உழவன் வளவன் என்று நம்பி எனக்கு அவன் இதயத்திலே இடமளித்திருக்கிறான். இவ்வளவும் உன்னால் வந்த வினைதான். எதைப்பற்றியும் கவலைப்படால் நீ மண்ணுக்குள் நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்துவிட்டாய். "கவலைப்படாதே! யாரோ ஒருவனின் மாளிகையில் உன் கல்லறை கட்டப்பட்டது என்ற அவச்சொல்லை அழிக்கிறேன். இதுவும் இருங்கோவேளின் மாளிகைதான் என்பதைத் தமிழகத்திற்கு விரைவில் தெரிவிக்கிறேன். நீ புதைந்திருக்கும் இந்த மண்ணின் மீது ஆணை! "இருங்கோவேள், அன்புக்கு விரோதியல்ல! ஆனால் பகைவனின் அன்புக்கு அவன் பணியமாட்டான். இருங்கோவேள் இதயமில்லாத வனல்ல; ஆனால் எதிரியின் இதயத்துக்கு அடிமையாகிவிடமாட்டான். என் இலட்சியம் நிறைவேற, என்னை மகிழ்விக்க நீ மன்னனைக் கொல்ல வந்தாய். உன் பெயர் உள்ளவரையில் அந்தக் களங்கம் உன்னைச்