ரோமாபுரிப் பாண்டியன்
385
ரோமாபுரிப் பாண்டியன் 385 அதற்குள் அரசர்க்கரசன் அவரைத் தழுவிக் கொண்டு, "அமைதியாயி ருங்கள்! தாங்கள் எந்தத் தவறும் செய்திடவில்லையே! என்று ஆறுதல் கூறினான். புலவரின் கண்கள் மலையருவிகளாயின. "சோழர்குலத் திலகமே! தங்களைக் காண வேண்டுமென்று தணியாத வேட்கையால் அனுமதி பெற்று உள்ளே வந்தேன். வந்தபோது தாங்கள் சிந்தனையிலாழ்ந்திருந்தீர்கள். உறங்கி விட்டீர்களோ என்ற ஐயப்பட்டால் சிறிது தயங்கினேன். அதற்குள் மெய்க்காவலர் இந்த ஓலைச் சுவடியினைக் கொணர்ந்து இங்கு வைத்துவிட்டு அகன்றனர். பொன்னோ பொருளோ எனில் தொட்டிருக்கமாட்டேன். என்னோடு உறவாடும் தமிழ்ச்சுவடி என்ற காரணத்தால் படிப்பதற்கு எடுத்தேன். நான் தங்களைக் காணவந்ததோ பூம்புகார்ப் புலவர் காரிக்கண்ணனாரைப் பற்றி விவாதிப்பதற்கு! வந்த இடத்தில் காண நேரிட்டதோ அவர் எழுதிய ஓலைச் சுவடியை! அந்தத் தொடர்புதான் மன்னவா இதனைத் தொடுவதற் குத் துணிவை அளித்தது!' என்றவாறு சுவடியை மன்னனிடம் நீட்டினார் புலவர். கரிகாலன் அதனைப் பெற்றுக் கொள்ளாமல், "கவி மன்னரே! பூம்புகாரில் வீசிக்கொண்டிருக்கும் புயல்பற்றித் தங்களுக்கு தெரியாதா என்ன ? வந்திருக்கிறீர்கள் என்றான் வாயிற்காப்போன்; 'வரவிடு!' என்றேன். அதற்குள் அனைத்தையும் மறந்து குழப்பத்தின் மடியில் படுத்து விட்டேன். ஏதேதோ சிந்தனை! முற்றுப் பெறாத முடிவுகள்! சிந்தனை முகட்டின் விளிம்பின் நினைவின் கால் தவறிய காரணத்தால் திடுக்கிட்டுக் கண் விழித்தேன். தங்களைக் கண்டேன். இந்தத் தவற்றுக்காக என்னை மன்னித்து விடுங்கள். பூம்புகார் அரண்மனையில் புலவர் களுக்கு இழைக்கப்பட்ட இரண்டாவது அவமானம் இது!' என்று கரிகாலன் கூறிக்கொண்டே விம்மி விம்மி அழத் தொடங்கினான். வில்லும் வேலும் வாளும் கொண்ட வீரர் கூட்டம் சுற்றி நின்று தாக்கினாலும் கலங்காத கரிகாலன், விம்மி அழுவது கண்டு புலவர் உருத்திரங்கண்ணனார் திகைத்து நின்றார். "அரசே! அரசே!' என்று கூறிக் கொண்டே அவரும் அழுதார். "தமிழ்ச் சோலையிலே சுதந்திரமாகக் கூவிக் கொண்டிருந்த இன்பக் குயிலைக் கூண்டிலே அடைத்து வைத்திடும் பெரும் பழியை என்னையன்றி வேறெந்த மன்னனும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டான். பகைவரை வென்றேன். பல படைகளை வீழ்த்தினேன். இப்படிப் பாரெல்லாம் புகழ்ந்தாலும் பாவாணராம் பைந்தமிழ்த் தேர்ப்பாகனைச் சிறையிலிட்ட கொடியவன் என்ற இழி சொல்லும் என் வரலாற்றில் ஏறிக் கொள்ளத்தான் போகிறது!" என்று புலம்பினான், பூம்புகார்க் கொற்றவன். .