உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

393


ரோமாபுரிப் பாண்டியன் 14 393 "இந்தக் கேள்விகள் இரண்டும் ஈட்டிபோலவும், கூரிய கணை போலவும் தைத்துத் தைத்து என் இதயத்தைத் தேன் கூட்டிலுள்ள அறைகளைப்போலப் பொத்தலாக்குகின்றனவே! “நான் என்ன செய்வேன்?" "முத்துநகையா? சோழன் தரணியா" "இந்தக் கேள்விக்கு இன்னும் சில நாழிகை நேரத்தில் நான் பதில் கண்டுபிடித்தாக வேண்டுமே!" -எனக் குழப்பமுற்றவாறு வளவன் வேடமிட்ட இருங்கோவேள் தனக்கெனத் தரப்பட்டிருந்த மாளிகை அறைக்குள் நுழைந்தான். அங்கே அவனது கட்டிலின்மீது ஓர் ஓலைச் சுருள் கிடந்தது. அதை அவசரமாகப் பரபரப்புடன் எடுத்துப் படித்துப் பார்த்தான். அதில்- "மாவீரனே! மானம் பெரிது; மனத்தில் உறுதி - தோளில் வலிவு இவை இருந்தால் எதிரியைச் சந்தித்து வெற்றி பெறு! இல்லையேல் சண்டையிட்டுப் பெருமையுடன் செத்துப்போ! கோழையாகாதே! வேளிர் குலத்து மானத்தை விலை பேசாதே!"-என எழுதப்பட்டிருந்தது. அந்த வரிகளை திரும்பத் திரும்பப் படித்தான் இருங்கோவேள். அந்த ஓலையிலிருந்த கையெழுத்து செழியனுடையது என்பதை இருங்கோவேள் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுக்கு அந்த ஓலையை எழுதியது யார் என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடிக்க ஏற்பட்ட ஆவலையும் மீறிக் கொண்டு திகில் எழுந்தது. தன்னை வட்டமிட்டவாறு யாரோ உலவிக்கொண்டிருக்கிறார்கள், பூம்புகார் அரண்மனையில் என்ற அச்சம் அவனைத் தாக்கத் தொடங்கியது. கையில் வசமாகச் சிக்கிக் கொண்ட கரிகாலனைக் கொன்றுவிடலா மென்று முடிவு கட்டிய பிறகு அந்தத் தீர்மானத்தின் விளிம்பிலே முத்துநகையின் மீது அவன் கொண்ட தூய்மையான காதல். தோகை விரித்து ஆடியவாறு, 'என்னை அறவே வெட்டியெறிந்து அழகைக் கொன்றுவிடப்போகிறாயா?" என்று அவனைக் கேட்பது போலிருந்தது. குழப்பம்! குழப்பம்! எங்கே திரும்பினாலும் குழப்பம்! சோழ மண்டலத்தின் தந்தை-பெருங்குடி மக்களின் சிந்தையெல்லாம் கவர்ந்த ஏந்தல் - கரிகாலனும் குழப்பத்தின் கோரப்பிடியில் அகப்பட்டுத் தத்தளித்தான். அது போலவே அவனைத் தீர்த்துக் கட்டிப் பகை முடிக்க வந்த இருங்கோவேள் மன்னனையும் குழப்பம் தாவி அணைத்து இறுகத் தழுவிக் கொண்டு இதயத்தைப் பிழிந்தெடுத்தது!