ரோமாபுரிப் பாண்டியன்
413
ரோமாபுரிப் பாண்டியன் 413 வில்லிலிருந்து கிளம்பிய அம்பெனப் பாய்ந்து சென்றான் வீரனொரு வன்: ஒரு சிறு கொப்பரையில் கண்ணிமைப் பொழுதிற்குள் தண்ணீரைக் கொணர்ந்திட்டான். அதனைத் தானே தன் கையினால் அள்ளி முத்துநகையின் முகத்தில் அறைந்தான் கரிகாலன். பனித்துளிகளைச் சுமந்தவாறே மகிழம்பூவின் இதழ்கள் விரிந்த மாதிரி நீர்த்துளிகளை ஏந்தியவாறே அவளுடைய நீல விழிகளின் இமை இதழ்களும் திறந்தன. காரிக்கண்ணனாருக்கு மட்டுமல்ல; கரிகாலனுக்கே மீண்டும் இப்போதுதான் உயிரே வந்தது. இருவரும் பெருமூச்செறிந்தனர். தன் தந்தையின் மார்பகத்தில் தான் சாய்ந்து கிடப்பதையும், எதிரே தன் பூங்கரத்தினைத் தாங்கியவாறே சோழப் பேரரசன் அமர்ந்திருப் பதையும், செழியன் உட்பட மற்ற வீரர்கள் முற்றுகையிட்டாற்போல் சுற்றிலும் வளைத்து நிற்பதையும் கண்டு மிரள மிரள விழித்தாள் முத்துநகை. மெள்ள மெள்ள மயக்கத்திலிருந்து மீட்சியுற்றுத் தன்னினைவு வரப்பெற்ற அவள், தன் பவள இதழ்களை விரித்து, "மன்னவா!' என்று விளித்தாள். அவருடைய பகைவன் என்று அறியாமலே இருங்கோவேளிடம் தன் இதயத்தையே அடகு வைத்த தன் பேதமையின் கரகரப்புத் தாளாமல் தன்மீதே தனக்கு ஏற்பட்ட அருவருப்பினாலோ என்னவோ, அவளுடைய விழிச்சுனைகளிலிருந்து நீர்த்தாரைகள் வழிந்து அவளது மாதுளங்கனிக் கன்னங்களை ஈரப்படுத்தின, மழைச்சரங்கள் போல. அவளுடைய அழுகையின் உட்பொருளை உணர முடியாதவனா சோழப் பெருவேந்தன்? "நீ எதற்கம்மா கலங்குகிறாய்? ஏதோ நடந்தது நடந்து விட்டது; இனி நடக்க வேண்டியவைகள் நல்லவைகளாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் நாம் சிந்திக்க வேண்டும். சென்றதை நினைத்தே சிந்தைகலங் குவதால் என்ன ஆகப் போகிறது?” என்று அவளது இதயச் சுமையை இறக்கிடும் வகையில் தேறுதல் மொழிந்தான், அவன். JM 'என்ன இருந்தாலும் இப்படிப் படுகேவலமாக ஏமாறுவேன் ஏமாற்றப்படுவேன் என்று நான் நினைக்க வில்லை; அரசே, நினைக்கவே இல்லை! ' என்று உள்ளங்கைகளைத் தொன்னையாகக் குழித்து, அவற் றில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு விசும்பி விசும்பி அழுதிட்டாள் முத்துநகை. "நீயாவது பெண்; பேதமை என்பது பெண்ணோடு பிறந்தது என்று சொல்வார்கள். ஆனால் நானோ...? இந்தப் பரந்த சோழ மண்ணையே ஆள்கின்றவன். அகவையில் (வயதில்) மட்டுமின்றிப் பட்டறிவிலும்