ரோமாபுரிப் பாண்டியன்
423
ரோமாபுரிப் பாண்டியன் 423 முத்துக் குளிப்பு விழாவினைத் தாங்களும் கண்டு களித்திட வேண்டு மென்னும் கரை கடந்த ஆசையினால், யவனரும் பிறரும் விழா நடக்கும் இடம் நோக்கி விரைந்தோடி விட்டதாலேயே அந்தப் பொருள்கள் அவ்வாறு தேக்கமுற்றுக் கிடந்திட நேர்ந்தது. இளவரசன் இளம்பெருவழுதியும் விடியற்காலையிலேயே விழித் தெழுந்து விட்டான். பன்னீர்ப் பூ மணம் கமழும் வெந்நீரில் குளித்து விட்டுப் புத்தாடை பூண்டு புறப்படுவதற்கு ஆயத்தமானான் - கடற் கரையினை நோக்கி. பாவையரின் பல்வரிசையோ, சுரைக்காய் விதைகளின் தோரணமோ எனச் சொல்லிடத்தக்க வகையிலே, முத்துச் சரங்களால் அலங்கரிக்கப் பட்ட தேர் ஒன்று, புரவிகள் பூட்டப்பெற்று, அரண்மனை வாயிலில் அவனுக்காகக் காத்திருந்தது. அந்த அழகிய தேரினில் ஏறி நின்று மிடுக்கான தோற்றப் பொலிவோடு அதனை அவன் ஓட்டிச் சென்ற காட்சி, காண்போரையெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்திலே மிதக்கவிட்டது. இளம்பெருவழுதியின் எழில் குலுங்கிடும் தேரினைக் கண்டதும் அவர்கள் வழிவிட்டு, "இளவரசர் வாழ்க! வாழ்க!' என்று வாழ்த்து மழையும் பொழிந்தனர். பொதிகையிலே பிறந்து பொங்கிப் புரண்டால் என்ன? ஆழிக்கணவ னிடம் அடைக்கலம் ஆவதை விடச் சாலச் சிறந்த தனி இன்பம் ஏது?' என்று தவழ்ந்தோடி வந்து, தன் சுழி முகத்திலே, கொற்கை நகருக்கும் வளத்தைக் கொடுப்பதல்லவா பொருநையாறு! அதன் பக்கமாக இளம்பெருவழுதி தன் தேரினைச் செலுத்தினான். அங்கே அவ்வளவாகக் கூட்டம் இல்லை. ஒரு திருப்பத்தில் வளைந்து நெடுஞ்சாலையை விட்டுப் புரவிகள் கீழே இறங்கிக் கடலினை நோக்கி நடந்த பொழுது தன் கண்களைத் தானே நம்பமுடியாமல் அவற்றை நன்றாக கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தான் இளம்பெருவழுதி. தழைத்துப் படர்ந்து கிடந்த ஒரு தாழம்புதர் அருகே தனித்து நடந்து கொண்டிருந்தாள் ஒரு தாழம்பூ மேனியாள்! தழையத் தழைய வெண் துகில் உடுத்தியிருந்த அவளுடைய மென்மையான அடிகள் பஞ்சுப் பொதியாய்ப் பரந்து கிடந்த மணல்வெளியில் மிதந்தும், புதைந்தும், மிஞ்சியும், கெஞ்சியும் அன்ன நடைபயின்றன. 'தங்கச் சிலையோ? தங்கக் கடைசலோ?' என்னும்படியான அவளது உருவத் தளதளப்பு, ஒடுங்கிய இடை, ஒயிலான நடை - எல்லாம் கூடி இளம்பெருவழுதியின் உள்ளத்திலே கதகதப்பை ஊட்டின; காமக் கனலை மூட்டின!