ரோமாபுரிப் பாண்டியன்
469
ரோமாபுரிப் பாண்டியன் " 469 எப்படியாவது தன்மொழியினைப் புகுத்திட...பரப்பிட வேண்டும் என்கிற ஒரே உள் நோக்கத்தைத் தவிர வேறு என்ன காரணம் இருந்திட முடியும். அவனுடைய வம்புச் செயலுக்கு?" "ஆமாம் வடிவம்பலம்; நீ புகல்வதும் சரிதான்; புதுமை என்றாலே பொதுமக்களிடையே ஒரு 'கவர்ச்சி' ஏற்படுவது இயல்புதானே? ஆழ்ந்து சிந்தித்திடாதவர்களின் அந்த மெல்லிய உணர்ச்சியினைப் பயன்படுத்திக் கொண்டுதான் சில பொல்லாங்குக்காரர்கள் மேன்மை அடைந்திடப் பார்க்கிறார்கள். ஆனால் இந்த மொழிப் பூசலிலே நம் இளவரசர் உறுதியோடு செயல்பட்டாராமே?" "ஆம், அண்ணா; அவரைப் போலவே, இன்னொரு வீராங்கனையும் தான் உண்மையான தமிழச்சிதான் என்பதனை மெய்ப்பித்துக் காட்டினாள். நம் தாயகத்தின் தன்மானத்தையும் காப்பாற்றினாள். "நானும் கேள்வியுற்றேன்; புலவர் அவர்கள்தாம் அவளைப் பற்றியும் கூறினார்கள்" என்று மொழிந்தான் செழியன். அவனுடைய முகமோ சட்டென்று கறுத்துவிட்டது கவலை நிழலால். இந்நேரம் தாமரை எங்கே இருப்பாளோ, யாரிடம் சிக்கினாளோ, என்னென்ன இடர்களுக்கெல்லாம் இலக்கானாளோ என்றெல்லாம் எண்ணங்கள் முகிழ்த்து அவனது இதயத்தைக் குடைந்தன, ஈட்டியாக! + . அவனுடைய அமைதிக்குரிய உட்பொருளை உணர்ந்திடாத வடிவம்பலம், "சரி, அண்ணா! நான் கிளம்பட்டுமா? இளவரசர் வந்திடும் செய்தியினை நான் விரைவாகச் சென்று மதுரையில் தெரிவித்திட வேண்டுமல்லவா?" என்று விடை கேட்டான். "ஆமாம், ஆமாம், நீ உடனே புறப்படு, இத்தனை நாழிகை உன்னைத் தவக்கப்படுத்தியதே தவறு" என்றான் செழியன். வடிவம்பலம் தன் புரவி மீதேறிக் கடுகிப் பறந்ததும், செழியனும் தன் சிறு தேரினைப் பூட்டி விட்டான். 'எனக்கு இப்பொழுதுதான் கவலை நீங்கியது. செழியா!" என்று பெருமூச்செறிந்தார் காரிக்கண்ணனார். "ஆமாம், புலவர் அவர்களே! இளவரசர் தலைநகருக்கு வந்திடுவார் என்ற செய்தியினைக் கேட்ட பின்னர்தான் என்னுடைய அச்சமும் அகன்றது" என்று அவரோடு ஒத்துப் பாடினான் செழியன். ஆனால், காரிக்கண்ணனாருக்கு உள்ளூர நிம்மதி மட்டுமல்ல: நகைப்பும்கூட! ஏன் தெரியுமா?