ரோமாபுரிப் பாண்டியன்
59
செழியனின் கண்கள் கட்டப்பட்டன. “ஏன் என் கண்களைக் கட்டுகிறீர்கள்?" என்று ஆத்திரத்தோடு கேட்டான் செழியன்.
"இனிமேல் நீ இந்த உலகத்தைப் பார்க்க முடியாது. சற்றுமுன் கடைசித் தடவையாகப் பார்த்தாயே. அதோடு சரி. உனக்கும் உலகத்துப் பெருங்காட்சிகளுக்கும் உள்ள தொடர்பு! ம்... இழுத்து வாருங்கள் அவனை!" என்று தீவட்டிக்காரன் ஆணையிட்டு விட்டுக் குதிரையைத் திருப்பிவிட்டான்.
விழிகளை இறுகக் கட்டிய நிலையில் செழியன் கல்லிலும் முள்ளிலும் கால்களை இடறிக்கொண்டு இரத்தம் கசியக் கசிய நடந்து சென்றான். அனைவரும் ஒரு ஏரிக்கரையோரமாக வந்து சேர்ந்தனர். காண்பவர் வியக்குமாறு அந்த நடுக்காட்டில் மரத்தால் அமைக்கப்பட்ட பல வீடுகள் இருந்தன. மாளிகை போன்ற தோற்றத்தில் கட்டிய ஒரு மரவீடு கம்பீரமாக அமைந்து இருந்தது. வீரர்கள் தங்குவதற்கு ஏற்றவாறு நீண்ட பாசறையொன்றும் காணப்பட்டது. காட்டு மரங்களை வெட்டி ஒழுங்கான பலகைகளாகக் கூட அறுக்காமல் முழு மரங்களாகவே அடுக்கி அவசரத்தில் கட்டப்பட்டிருந்தன அந்த வீடுகள்.
மாளிகை போன்ற வீட்டுக்கு எதிரே காற்றோட்டமேயில்லாத ஒரு மரவீடு இருந்தது. அதற்கு அழுத்தமான கதவு மட்டுமே இருந்தது. கதவில் பெரிய பூட்டு ஒன்று இருந்தது. அந்த வீட்டின் முகப்பில் வெள்ளை வண்ணத்தால் "சாவூருக்குப் போகும் வழி" என்று எழுதப்பட்டிருந்தது.
மாளிகை வீட்டின் பின்புறத்தில் சற்றுப் பொலிவு குறைந்த ஆனால் மாளிகைத் தோற்றமேயுள்ள மற்றொரு வீடும் காணப்பட்டது. முன்மாளிகையில் அரசனும் பின்னுள்ள மாளிகையில் அரசாங்கத்துப் பெண்களும், அரசியும், இளவரசியும் தங்கியிருக்கவேண்டும் என்ற உண்மையை செழியன் புரிந்துகொண்டிருப்பான். அவனது கண்கள் கட்டப்படாமல் இருந்திருந்தால்!
கரிகால் சோழனிடம் தோற்றுவிட்ட இருங்கோவேள் எப்படியும் தன் பகையைத் தீர்த்துப் பழிவாங்கிட வேண்டுமென்ற எண்ணத்தோடு அந்தக் காட்டில் தனது தளநாயகர்களோடும், அமைச்சர்களோடும், அரசியோடும், அரசகுமாரியோடும் மரமாளிகை அமைத்துத் தங்கி யிருந்தான். மக்களில்லாமல் மாவீரர்களையும் மந்திரி பிரதானியரையும் மட்டுமே கொண்ட அவனது அரசு, அந்தக் கானகத்தில் நடைபெற்று வந்தது. அங்கும் அவனுக்கு நிம்மதியில்லை. கரிகாலனைப் பூமியில் வீழ்த்தும்வரை அவனுக்கு ஓய்வில்லை. வெறிபிடித்து அலைந்து கொண்டிருந்தான். அவன் கனவு பழுக்கப்போகும் நேரத்தில்தான்