612
கலைஞர் மு. கருணாநிதி
அகஸ்டஸ் பெருமகனாரே துறைமுகத்திற்கு நேரே வந்து வழியனுப்பி வைத்திட செழியன், முத்துநகை, ஜூனோ முதலானோரைச் சுமந்திட்ட மரக்கலம், ரோமாபுரியை விட்டு தமிழகம் நோக்கிப் புறப்பட்டது. இந்தப் பயணத்தின்போது, சிப்பியோ, உடன் வரவில்லை. பிணியுற்றுவிட்ட தன் அன்னையைப் பேணிடும் பொருட்டு அவன் தன் தாயகத்திலேயே தங்கிவிட்டான். அழகு மலிந்திட்ட ரோமாபுரி - ஆற்றல் மிகுந்திட்ட அகஸ்டஸ் சீசர்-இவர்களைப் பிரிவதிலே எத்துணைத் துயரம் உண்டாயிற்றோ அதற்குச் சற்றும் குறைந்திடாத வேதனையே இனிய நண்பன் சிப்பியோவைப் பிரிவதிலும் செழியனுக்கு ஏற்பட்டது. முன்பு தமிழகத்திலிருந்து ரோமாபுரிக்கு வந்திட்ட பொழுது அந்தக் கப்பற் பயணத்தைக் கலகலப்பானதாக - களிப்பு நிறைந்ததாக ஆக்கிய வன் சிப்பியோவே அல்லவா? இப்போதோ, ரோமாபுரியைப் பிரிந்துவரும் துயரத்தோடு பெருவழுதிப் பாண்டியர் என்ன ஆனாரோ என்ற துக்கமும் செழியனின் நெஞ்சுக் கூட்டை நெரித்துப் பிசைந்திட்டது. இந்த வேளையில் அவனைக் கவலை இருளினின்றும் கரையேற்றி மகிழ்ச்சி வெளிச்சத்திற்கு இட்டுச்செல்ல வேண்டியது யார்? ஜூனோதான் அல்லவா? ஆனால் அவளோ...? கடலிலே மரக்கலம் மிதக்கத் தொடங்கி நெடுநேரங்கடந்திட்ட போதிலும் ஜூனோ அவன் கண்ணிலேயே தென்படவில்லை. அவளும் முத்துநகையும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தனி அறையில் என்னதான் இரகசியங்களைப் பரிமாறிக் கொள்வார்களோ? ஏன்தான் அப்படிக் 'கலீர் கலீர்' என்று சிரிப்பலைகள் எழுப்புவார்களோ?
இரண்டொரு தடவை முத்துநகையாவது அவன் அறைக்கு வந்து எட்டிப் பார்த்து 'ஏதேனும் கொண்டு வரச் சொல்ல வேண்டுமா அண்ணா?" என்று கேட்டுவிட்டுச் சென்றாள். ஜூனோவோ அம்மாதிரி வந்திடவும் இல்லை. அவன் எப்படி இருக்கிறான் என்று பார்த்திடவும் இல்லை.