ரோமாபுரிப் பாண்டியன்
643
ரோமாபுரிப் பாண்டியன் 643 வண்ண விளக்குகளாலும் வகைவகையான மலர்ச்சரங்களாலும் எளிமையான முறையிலே அலங்கரிக்கப்பட்டிருந்தது, அந்த அரண் மனைக் கொலுமண்டபம். ஆயினும் - முத்தனைய விண்மீன்கள் எத்தனை கோடிதான் மோகப்புன்னகை வீசிடினும் நிலவில்லா வானுக்கு நெஞ்சினைக் குளிர வைத்திடும் பொலிவேது? - வலுவேது? பெருவழுதிப் பாண்டியன் இல்லாத அந்த எழிலார்ந்த பெருமண்டபமும் துயரமூச்சினைச் சுமந்திட்டதாகக் களையிழந்தே காணப்பட்டது. விளக்கில்லா மாடம் என வெறுமையுற்றுக் கிடந்திட்ட அரியணை யைப் பார்த்திடும்பொழுது சிலருக்கு அழுகையே பீறிட்டுக் கொண்டு வந்துவிட்டது. மீண்டும் ஒரு புதிய விளக்கு அங்கே புத்தொளி வீசிடத் தான் போகிறது - அதற்காகத்தான் குழுமியிருக்கிறோம்... என்கிற உணர்வுகூட அவர்களை விட்டுச் சற்றே விலகிவிட்டது. முதல் நிகழ்ச்சியாகக் கரிகாலனும் மற்றவர்களும் எழுந்து நின்று மறைந்த மாமன்னனுக்குச் சிலநொடிப் பொழுது தங்கள் இறுகி மூடிய உதடுகளால் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர். பிறகு சோழப் பேரரசன், அவையோர்களை முறைப்படி விளித்து வணக்கம் செலுத்திவிட்டுத் தன் உரையினைத் தொடங்கினான்: - ...பாண்டியப் பெருநாட்டின் வரலாற்றிலேயே இன்று பொன்னாள் என்று சொல்வதைவிட ஒரு திருப்புமுனை நாள் என்று சொல்வதே சாலப் பொருந்துவதாகும். ஒரு நெருக்கடியான நிலையினை நேசக்கரங் கொண்டு - பாசப் புனல்கொண்டு தணிக்கவும் தவிர்க்கவுமே நாம் இங்கே குழுமியுள்ளோம். காழ்ப்புக்கோ கசப்புக்கோ துளியேனும் இடமின்றி, எவ்வளவுக்கெவ்வளவு பொறுப்புடன் கடமை ஆற்றுகின் றோமோ அவ்வளவுக்கவ்வளவு என் இனிய நண்பருக்கு - உங்கள் மறைந்த பேரரசருக்கு - நாம் செய்திடும் சிறப்பு மட்டும் அல்ல; கைம் மாறும் ஆகும். நம்மை அச்சுறுத்துகின்ற இன்றைய அரசியல் சிக்கலை அவிழ்ப்பதற்கு அவரே ஓர் அருமையான கருவியையும் படைத்து விட்டுப் போயிருக்கின்றார். அதுதான் இந்த இறுதி முறி. இதிலே வரையப்பட்டுள்ள ஒவ்வோர் எழுத்தினையும் நிறைவேற்றி டுவதே நமது நீங்காக் கடமை என்பதை நான் நினைவூட்டிடத் தேவை யில்லை. ஆனால் இது பெருவழுதிப் பாண்டியரால்தான் எழுதப்பட்டதா என்னும் ஐயப்பாடு சிலருக்கு எழுந்திடலாம். அதனை அகற்றிட வேண்டும் என்பதற்காக அவரோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த