உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

652

கலைஞர் மு. கருணாநிதி


652 கலைஞர் மு. கருணாநிதி வேந்தர் எழுதியிருப்பது வரிக்கு வரி - எழுத்துக்கு எழுத்து உண்மை. இந்தச் செழியன் பிறந்திட்டபொழுது இவன் தாய் முல்லைக்கொடி யாளுக்குப் பிள்ளைப்பேறு பார்த்தவளே நான்தான்! முத்தூர்க் கூற்றத்துக் குறுநில மன்னனாகிய இவனுடைய அம்மான் இறந்திட்ட பிறகு, திக்குத் தெரியாமல் தேம்பி அழுதிட்ட இவனை என்பிள்ளையாகவே வளர்த் திட்டவளும் நான்தான்! என்னுடைய வறுமைநெருப்பு இவனையும் ஏன் வாடிட்ட வேண்டும் என்பதற்காக அந்த நாளில் இதே அரண்மனை அந்தப்புரத்திற்கு வந்து, அரசி அவர்களைச் சந்தித்து 'மன்னனின் மகன் என் மண் குடிசையில் வாழ்கிறான்; அவனைக் கொண்டு வந்து இங்கே விட்டுவிடுகிறேன்' என்று கூறியவள் நானே! பெருவழுதியின் மேலிருந்த பாசப்பெருக்கினால் அவனுக்குப் போட்டியாகச் -சற்று முறைதவறிப் பிறந்திட்ட செழியனை ஏற்றுக் கொள்ள உடன்படாததால், அவனை நன்றாக ஆளாக்கிப் பாண்டிய நாட்டுப் படையிலே சேர்த்துவிட்டவளும் நான்தான். கரிகாலனின் வைரியான இருங்கோவேளைத் தானே கொன்றிடுவதற்குச் சூளுரைத்துக் கொண்டிருந்த இவன், எங்கே அவன் தன் மைத்துனன்தான் என்பதை அறியாமல் தன் கையாலேயே அவனைக் கொன்று விடுவானோ என்று அஞ்சி, பெருந்தேவி இவனுடைய தமக்கைதான் என்கிற உண்மையினை வெகுகாலம் கழித்து அவனிடம் வெளிப்படுத்தியவளும் நான்தான். அதேசமயம், பாண்டிய மன்னர்தான் இவன்தந்தைஎன்று சொன்னால் தன் தாயைக் கெடுத்தவர் என்கிற ஆத்திரத்தில் அவரை இவன் வேம்பாக வெறுத்திடுவானோ என்று எண்ணி, அந்த உண்மையை இதுகாறும் இவனிடம் சொல்லாமல் மறைத்தவளும் நான்தான். ஆனால் கடைசிக் காலத்தில் பாண்டிய வேந்தரிடம் வந்து இவனுக்காக வாதிட்டவளும் நான்தான்! ஆகவே, செழியன்தான் இந்த நாட்டின் மன்னனாக வேண்டியவன். இவனுக்குத் தான் மணிமுடி சூட்டிட வேண்டும் என்று உங்கள் எல்லாரையும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்" மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிட, அந்த மூதாட்டி இவ்வாறு மொழிந்து முடித்திட்டது தான் தாமதம்! "பாண்டிய மன்னர் செழியன் வாழ்க! ரோமாபுரிப் பாண்டியன் செழியன் வாழ்க!" என்னும் வாழ்த்தொலிகளாலும் கரவொலிகளாலும் அந்த அரண்மனைக் கொலு மண்டபமே அதிர்ந்திட்டது. உற்சாக வெறியினால் உந்தப்பட்ட இளைஞர்கள் பலர் செழியனை நோக்கி ஓடிச்சென்று அவனை அப்படியே அலாக்காகத் தூக்கி தலைக்கு மேல் வைத்துக் கொண்டு கூத்தாடினர், பின்னர் அரியணைக்கு அருகே அவனைப் பொத்தென்று கொண்டு போய்ப் போட்டனர்.