ரோமாபுரிப் பாண்டியன்
69
இறுதியில், கரிகாலன் இருக்கும் மாளிகைக்குள் அவள் நுழைந்தாள். அவளைக் கண்டதும் கரிகாலனுக்கு ஒரே ஆச்சரியம்!
"என்ன! நீயா?" எனப் பதட்டத்துடன் கேட்டான்.
"ஆமாம், கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்" என்றாள் முத்துநகை.
அரசன், காவலர்களைச் சைகை காட்டி வெளியே அனுப்பி வைத்தான். முத்துநகை அரசரையே பார்த்துக் கொண்டு நின்றாள். கரிகாலனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. "என்னம்மா! எங்கே வந்தாய்? என்ன நடந்தது? புலவர் எங்கே?"
இப்படிக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போன சோழனின் காலில் தடாலென விழுந்து, "மன்னவா! என்னை மன்னியுங்கள்!" எனக் கதறி அழுதாள் அந்தப் பைங்கொடி.
"எழுந்திரம்மா! செய்தியைச் சொல்! எதற்காக இந்தக் காலை நேரத்தில்? விடிந்ததும் விடியாததுமாக?" எனக் கேட்டான் சோழன்.
"விடியவில்லை அரசே; விடியவில்லை; சோழநாட்டைச் சூழ்ந்துள்ள இருள் இன்னும் விலகவில்லை. அதைத் தெரிவிக்கவே தங்களிடம் ஓடி வந்தேன்!"
"என்ன சொல்கிறாய்?"
"திக்கெட்டும் படையெடுத்து நிலம் பல வென்றவர் தாங்கள் ! சோழர் படையினர் கொட்டும் முரசொலி கேட்டுத் தாள்வீழ்ந்த பகைவர் ஏராளம்! ஏராளம்! ஒளியரை, பொதுவரை, இலங்கையரை வென்றீர்கள்! வேளிர்குடி மன்னரைத் தோற்கடித்தீர்கள்! தங்கள் வெற்றிவேலின் பெருமையைப் புகழாத நாடு இல்லை! இமயத்திலே நமது கொடியினைப் பொறித்தீர்கள்! இல்லையென்று கூறவில்லை! ஆனால் ஒன்று, மன்னா! இத்தனை வெற்றித் திறமிருந்தும் தங்களுக்குத் தாயகத்தில் முளைவிட்டு வளரும் துரோகக் கூட்டத்தைப் புரிந்து கொள்ளும் திறமில்லை! மன்னிக்கவும்! தங்கள் பரந்த தூய உள்ளம் அந்தத் துரோகிகளைப் பற்றி நினைக்காமலே விட்டு விட்டது என்பதை நான் உணர்கிறேன். ஆனாலும் அரசே! அந்தக் கூட்டம் வளருமேயானால் நாடு அழியும்; நமது பெருமை அழியும்!"
"என்ன! துரோகக் கூட்டமா? யார் அவர்கள்? எங்கிருக்கிறார்கள்?"
"அவர்கள் ஒன்றும் தனியிடத்தில் வாழ்வது கிடையாதே! காக்கைகளைப் போலக் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து வாழ்வதும் கிடையாதே! துரோகிகள் நமக்குப் பணிவிடை புரியும் ஊழியர்களிலே கூட இருப்பார்-