18-வது அதிகாரம்
புதிய ஊர்வசி
தசரா தினத்தன்று மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரையில் நாடகம் நடத்தப் படுமென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடிப்போர் அனைவரும் அன்று பிற்பகல் மூன்று மணிக்கே அரண்மனையின் பின்புறத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்கு வந்து சேர்ந்து தம்மை நேர்த்தியாக அலங்கரித்துக் கொள்வதே வேலையாகச் செய்து கொண்டிருந்தனர். அன்று முழுதும் மல்லிகாவின் மனது, கரை கடந்த ஸஞ்சலத்தை அடைந்த வண்ணமிருந்தது. அவ்வளவு சொற்ப காலத்தில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுபாடுகளைப் பற்றி நினைத்தும், தான் அன்று ஒரு கால் அவமானப்பட நேருமோவென்று நினைத்தும் பெரிதும் கவலையும் அச்சமும் அடைந்தவளாய்த் தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.
அந்தக் கொட்டகையில், நாடகம் பார்க்கும் ஜனங்களிருக்கும் இடமானது, நீளத்தில் இரண்டு பாகமாகத் தடுக்கப்பட்டு, இரண்டு பாகத்திற்கும் இடையில் இரண்டாள் உயரம் திரையால் மூடப்பட்ட தட்டிகள் வைக்கப் பெற்றிருந்தன. ஒரு பக்கத்தில் இருப்பவரை மறு பக்கத்தில் இருப்பவர் பார்த்தல் கூடாத காரியமாயிருந்தது. அதில் ஒரு பக்கத்தில் அரண்மனை பாயிஸாகேப்புகளும், இன்னம் அரண்மனையைச் சார்ந்த ஸ்திரீகளும் உட்காருதல் வழக்கம். மற்ற பாகத்தில் அரண்மனை உத்தியோகஸ்தர்களும், சிப்பந்திகளும், முக்கியமான சில மகாராஷ்டிர ஜெமீந்தார்களும், நடிப்பவர்களின் சொந்தக்காரர்களும் உட்கார்ந்தார்கள். எங்கும் விளக்குகள் சூரியன் உதயமானதைப்போலப் பளிரென்று பிரகாசித்தன.
மணி ஆறு அடிக்கும்போதே, இனிமையான சங்கீத்தின் ஓசை எழுந்தது. கோவிந்தசாமிராவ் தாளத்தை நிரம்பவும் அல்ட்