உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

வஸந்தமல்லிகா

"நிரம்ப சந்தோஷம் இந்த உபகாரம் யார் செய்யப் போகிறார்கள்?" என்றான் கிழவன். உடனே பீமராவ் கிருஷ்ணவேணியைப் பார்த்துப் புன்னகை செய்து, விடை பெற்றுக் கொண்டு, மல்லிகாவிடத்திலும் தான் போய் வருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டு வெளியில் நடந்தான்.

பிறகு மல்லிகா மெத்தையின் மேல் தனது படுக்கைக்குச் சென்றாள். பீமராவின் அழகிய முகமும் அவனது மரியாதையான மொழிகளும் அவன் காட்டிய எதிர்பாராத அன்பும் அவளுடைய நினைவில் அடிக்கடி வந்து தோன்றின. அவற்றை அலட்சியமாக விலக்க முயன்றும் திரும்பத் திரும்ப அவைகள் பிடிவாதமாக அவளது மனதில் உதித்தன. ஆனால், அவைகள் அவளது மனதிற்கு இன்பத்தையாவது, துன்பத்தையாவது உண்டாக்கவேயில்லை; சிறிது நேரத்தில் அவளது மனதில் வஸந்தராவின் உருவமும் நினைவும் தோன்றி அதைக் கவர்ந்து கொண்டன. தான் அவரையே யாவரிலும் விசேஷமாக மதித்து, மானம் முதலியவற்றை இழந்து அவரோடு வந்து மோசம் போனதை நினைத்து அவள் பெரிதும் வருந்தினாள். என்றாலும், அவர்மீது வைத்த காதல் தனது மனமும் தேகமும் அழிந்தாலன்றி மாறாதென்பதை மாத்திரம் உறுதியாக வைத்துக் கொண்டாள். தான் இனி வேறு புருஷரைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை என்று சங்கல்பம் செய்து கொண்ட வண்ணம் அவள் துயிலிலாழ்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/140&oldid=1232168" இலிருந்து மீள்விக்கப்பட்டது