தமிழ்த் திரையில்... முதல் நாவல்
புராணக் கதைகளும், இதிகாசக் கதைகளும், ராஜா ராணிக் கதைகளும் படமாக எடுக்கப்பட்ட தமிழ்த் திரையின் தொடக்க காலத்தில்... முதன்முதலாக நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் மேனகா.
அந்நாளின் புகழ் பூத்த எழத்தாளர் வடுவூர் துரை சாமி ஐயங்கார் எழுதிய நாவல் இது.
திரைப்படமாக எடுக்கப்படுவதற்கு முன்பு மேனகா நாவல், நாடகமாகவும் வடிவமைக்கப்பட்டு பல தடவை மேடையேறி புகழ் பெற்றது. அப்போது, நடிகர் எம்.கே. ராதாவின் தந்தையார் எம். கந்தசாமி முதலியார், மேனகா நாடகத்திற்கு வசனம் எழுதினார் (டி.கே. சண்முகம் சகோதரர்கள்தான் இந்நாடகத்தைத் தயாரித்து வழங்கியவர்கள்).
1935இல் மேனகா நாவலைப்படமாக்கிய பொழுது அதில் டி.கே. பகவதி, டி.கே. சண்முகம், என்.எஸ். கிருஷ்ணன், டி.கே. சங்கரன், எஸ்.வி. சகஸ்ரநாமம், கே.ஆர். ராமசாமி, டனை. சிவதாணு ஆகியோர் நடித்தனர். இவர்கள் அனைவருக்கும் இதுவே முதல் படம் என்பதும் குறிப்பிடத் தக்க செய்தி. எம்.எஸ். விஜயா, கே.டி. ருக்மணி ஆகியோரும் நடித்த இப்படத்தை இராஜா சாண்டோ இயக்கினார். பாரதியாரின் பாடல் முதன் முதலாக ஒலித்த படம் என்ற வரலாற்றுப் பெருமையும் மேனகா படத்தையே சேருகிறது.
நன்றி - பதிப்புத் தொழில் உலகம், ஜூலை 2004