22-வது அதிகாரம்
பொரியலும் வறையலும்
அதற்கு முன் பழக்கமில்லாத ஓர் அன்னிய புருஷர் தன்னைக் கட்டித் தூக்கியதால் உண்டான லஜ்ஜையையும் சங்கடத்தையும் பொறாமல் மல்லிகா பெரிதும் வருந்தித் தத்தளித்தாள். நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலியவற்றால் நிரம்பவும் துன்ப முற்றாள். தான் நெருப்பினிடையில் அகப்பட்டுக் கொண்டதை அவள் மறந்தவளாய் ஜனங்கள் படும் பாட்டைக் கண்டு, "மெதுவாகப் போங்கள்; மெதுவாகப் போங்கள்" என்று கூச்சலிட்டாள். மோகனராவ் அவளைத் தூக்கிக் கொண்டு விரைவாக ஏணியின் வழியாய்க் கீழே இறங்கினார். அவள் உட்கார்ந்திருந்த மேல் மாடம் எல்லாம் நெருப்புப் பிடித்துச் சூழ்ந்து கொண்டிருந்தமையால், அவர்கள் நெருப்பின் ஜ்வாலை வழியாகவே கீழே இறங்கினார்கள். இறங்கிய பின் மோகனராவ் அவளைத் தூக்கிக் கொண்டு பக்கப் படுதாக்களின் வழியாக ஜனங்களிருந்த இடத்திற்கு வந்து விட நினைத்தார். ஆனால், ஜனங்கள் வெளியில் போக மாட்டாமல் தத்தளித்ததைக் கண்டு அங்கு வருவதில் எவ்விதமான பயனும் இல்லை என்று மோகனராவ் உணர்ந்தாராயினும், தப்பிப் போக வேறு வழியில்லாததைக் கண்டு அவ்விடத்திற்கே வந்துவிடலாம் என்னும் எண்ணத்தோடு அவர் அவளைத் தூக்கிக்கொண்டு முதலில் வலது பக்கத்திற்குப் போனார். அங்கிருந்த பக்கப் படுதாக்களிளெல்லாம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தமையால், அந்த ஜ்வாலைக்குள் நுழைந்து போவதற்குக் கூடவில்லை. பிறகு அவர் இடப்பக்கத்தில் ஓடினார். அங்கு மேல் பக்கத்தில் கொட்டகையில் நெருப்புப் பிடித்து அதன் ஒரு பாகம் தீய்ந்து கீழே விழுந்து கிடந்தமையால், அவ்விடத்திலும் வழி இல்லாமல் போயிற்று. அதற்குள் மல்லிகா, தன்னைத் தீய்த்த தணலின் வெப்பத்தைப் பொறாமல் தவித்துத் தத்தளித்து மூர்ச்சையடைந்தாள்.