உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுவர்க்கோழி

197

பீம : எனக்குக் கூட எரிகிறது? என்ன செய்கிறது?

ஸகா : அது போகட்டும்; கலியாணபுரம் ஜெமீனாவது கிடைக்கும் வழியைப் பார்; சும்மா இருந்து விடாதே

பீம : அப்படி இருப்பேனா? அவசியம் செய்கிறேன்; ஆகட்டும்.

ஸகா : சரி; கூத்தாடி ஸஞ்சலாக்ஷியை இனிமேலாவது விட்டு விடு. நான் சொல்வதைக் கேள்.

பீம : கேட்கிறேன். ஆகட்டும்.

ஸகா : முன்னே தமயந்தி' என்று ஒரு கழுதையைக் கட்டிக் கொண்டு அழுதாய்; அந்தப் பீடை தெய்வச் செயலாக ஒழிந்தது. இந்தப் புதுச் சனியன் எப்போது தொலையுமோ தெரியவில்லை என்றான். அண்டை வீட்டிலிருந்த வண்ணம் அதைக் கேட்ட தமயந்தி பாயிக்கு பெரிதும் கோபமூண்டது. தன்னைப் பற்றி நிரம் பவும் ஏளனமாகப் பேசிய கிழவனது மண்டையை உடைத்து விடலாம் என்று அவள் நினைத்திருந்த சமயத்தில் கிழவன் எழுந்து வெளியில் போய்விட்டான்.

தான் கண்டுபிடித்த இரகசியங்களைப் பற்றி தமயந்திபாயி பெரிதும் சந்தோஷமடைந்தவளாய் போஜனத்திற்குச் சென்றாள். அன்று கேட்ட சம்பாஷணையிலிருந்து ஸஞ்சலாக்ஷியே மல்லிகா என்றும், பவானியம்மாள்புரம் ஜெமீன் முதலியவற்றிற்கு அவளே சொந்தக்காரி என்றும், அவள் தனது பிறப்பு முதலியவற்றை அறியாமல் இருக்கிறாள் என்றும் யூகித்துக் கொண்டாள். பீமராவ் அந்த இரகசியத்தை அவளிடத்தில் சொல்லாமலே அவளைக் கலியாணம் செய்து கொண்டு, தானே ஜெமீந்தார் ஆக வேண்டும் என்று நினைத்ததையும் அறிந்தாள். அவ்விஷயங்களை நினைக்க நினைக்க அவளது ஆச்சரியம் அதிகரித்தது. தன்னை அவன் முற்றிலும் மறந்து ஸஞ்சலாக்ஷியைத் தொடர்வது, அந்தக் காரணத்தினாலேதான் என்பதையும் அவள் உணர்ந்தாள். "அடே பீமராவ்! நீ எல்லாரிலும் அதிக சாமர்த்தியசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். உன்னையே உயிராக மதித்த என்னைப் பணத்தின் பொருட்டு வஞ்சித்தாயல்லவா! இருக்கட்டும். உன்னுடைய எண்ணம் பலிப்பதை நான் பார்க்கிறேன்" என்று அவனது அறையை நோக்கி தனக்குள் பௌரஷம் கூறிய பின், ஒரு சிறிய கடிதம் எழுதி சென்னைக்கு அனுப்பினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/215&oldid=1233958" இலிருந்து மீள்விக்கப்பட்டது