236
வஸந்தமல்லிகா
வஸ : அவருடைய இளைய சம்சாரத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அவளுடைய பேர்த்தியைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. போகட்டும்; சந்தோஷமே. அவளுடைய பெயரென்ன?
தம : ஸஞ்சலாக்ஷி.
வஸ : (அதிசயித்து) ஆ! ஸஞ்சலாக்ஷியா! மோகனராயரே, இவளைப் பற்றித்தானே தாங்கள் என்னோடு சண்டைக்கு வந்தது? இவளை நான் பார்த்தது கூட இல்லை என்று சொன்னேனே!
மோக : ஆம், ஆம்; அவள்தான். ஆனால், அவளுக்கும் தங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று நான் சமீப காலத்தில் தான் அறிந்து கொண்டேன்.
வஸ : நீங்கள் அவளைப் பார்த்து அவளோடு பேசினீர்களா?
மோக : ஆம்; சாஸனத்தைக் கூடப் பார்த்தோம். அதில் தங்களுக்கும் சொற்ப பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால்..
வஸ : (புன்சிரிப்போடு) ஆனால் என்ன?
மோக : ஆனால் நீங்கள் இதுவரையில் செலவழித்ததற்கும் அதற்கும் சரியாய்ப் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.
வஸ : சரி என்னுடைய பழைய நிலைமை எங்கே போய் விட்டது? எனக்கு இதைப் பற்றி கவலையே இல்லை. அவள் எப்படி இருக்கிறாள்?
மோக : நிரம்பவும் அழகு பொருந்திய யௌவன மங்கை யாக இருக்கிறாள். இந்த ஜெமீனுக்கு எஜமானியாகும் யோக்கியதை அவளிடம் பூர்த்தியாக பொருந்தி இருக்கிறது.
வஸ : நல்ல வேளை! யோக்கியதை அற்றவர்களிடத்தில் ஜெமீன் போய், அதனால் முன்னோர்களின் பெயர் கெட்டுப் போகுமோ என்று கவலைப்பட்டேன். நீங்கள் சொன்னதைக் கேட்க, சந்தோஷமே! ஆனால், எனக்கொரு சந்தேகம்; கோபித்துக் கொள்ளக் கூடாது. தங்களுக்கு அந்த ஸ்திரீயைக் கலியாணம் செய்து கொள்ளும் உத்தேசமுண்டோ?