உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முடவனும் கொம்புத்தேனும்

27

மேல் ஆசை வைத்துக் கலியானம் செய்து கொண்டால் நாங்கள் என்னபாடு பட வேண்டுமோ தெரியவில்லையே!” என்று கூறிச் சிரித்தாள்.

"பல்லக்கில் ஏறுவதற்கு ஒருவனிருந்தால், அதைச் சுமக்க சிலரிருக்க வேண்டாமா? இரண்டு கோடி ரூபாய் பெறுமானமுடைய ஜெமீந்தாரின் சீமாட்டியென்றால், அது இலேசான பதவியா? அதைப் பெறுபவருக்கு எவ்வளவோ கருவமும் பெருமையும் இருப்பது சகஜந்தானே! அந்த யோக்கியதைகூட இல்லா விட்டால் ஜெமீந்தாரை எவள்தான் கலியாணம் செய்து கொள்வாள்?" என்று தற்பெருமை பாராட்டி மொழிந்த கமலா, சுவரில் ஆணியில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியைத் தனது கையிலேயே எடுத்து முகத்துக்கு நேரில் வைத்துக் கொண்டு ஏற இறங்கத் தன்னைப் பார்த்தவண்ணம் பேசினாள்.

"அதிருக்கட்டும். நாம் மிகவும் ஏழையென்பது அவருக்குத் தெரியாதா? அவர் உன்னை எப்படிக் கலியாணம் செய்து கொள்வார்?" என்று வினவினாள் ஸீதா.

"அடி முட்டாளே! அவர் இப்போதல்லவா தணிகரானார்; இதுவரையில் நம்மைப்போல் இருந்தவர்தானே. நாம் பூனாவிலிருந்தபோது, அவர் அடிக்கடி வந்து நம்முடைய அப்பாவுடன் போஜனம் செய்திருக்கிறார். அப்போது நாம் குழந்தைகளாயிருந்தோம். என்னை அவர் எத்தனையோ தடவைகளில் ஆசையோடு எடுத்து அணைத்து முத்தமிட்டிருக்கிறார். நான் அவரிடத்தில் சந்தோஷமாக விளையாடியபோது, தம்மைக் கலியாணம் செய்துகொள்ள சம்மதமாவென்று அவர் கேட்டார். அவ்வளவுதூரம் செய்தவர் இப்போது உன்னத ஸ்தானத்துக்கு வந்துவிட்டதனாலேயே நம்மை மறந்துவிடுவாரா? அப்படி ஒருநாளும் செய்ய மாட்டார்; தவிர, அவர் பாலியர்; இங்கே தனிமையில் வந்திருக்கப் போகிறார். இங்கே அவருக்கு நம்மைத் தவிர நம்முடைய ஜாதியாரில் வேறே யார் துணைவர் இருக்கிறார்கள்? நாம் அடிக்கடி பங்களாவுக்குப் போய்ப் பழகி, அவருடைய மனசைக் கவர்ந்துவிடலாம். நாம் அதிக ஏழையென்பதை ஏன் காட்டிக் கொள்ள வேண்டும். எல்லா விஷயங்களிலும் நாம் பெரிய மனிதரைப்போல டம்பமாய்க் காண்பித்துக் கொண்டால், சரியாய்ப் போகிறது. மல்லிகா வருகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/45&oldid=1229221" இலிருந்து மீள்விக்கப்பட்டது