ஸுகாரம்பம்
61
மேலிருப்பதையொத்திருந்தது. அவள் உடனே ஒரு குடத்தைக் கையிலெடுத்துக்கொண்டு, வீட்டை விட்டுப் புறப்பட்டு, ஊருக்கு அரைக்கால் மைல் வடபுறத்தில் ஓடும் சிற்றாறாகிய வடவாற்றை நோக்கி நடந்து கால் நாழிகையில் ஆற்றின் படித்துறையை அடைந்தாள். அவ்விடத்தில் மனிதர் எவருமில் லாதிருந்தமையால், குடத்தைப் படிக்கட்டின்மீது வைத்துவிட்டு தானும் கீழே உட்கார்ந்து கொண்டாள். அவ்வாறு அவள் தனிமையை அடைந்தவுடன், அவளை வருத்திய எண்ணங்கள் யாவும் திரும்பவும் ஒன்றுகூடி எழுந்தன; அவள் தன்னையும் மறந்தாள்; வீட்டையும் மறந்தாள்; ஆற்றையும் மறந்தாள்; குடத்தையும் மறந்தாள்; விசனமாகிய கடலில் முழுகியவளாய்க் கண்ணீர் சொரிந்து அழுதவண்ணம் உருகி ஓய்ந்து உட்கார்ந்திருந்தாள்.
ஒரு நாழிகை நேரத்திற்குப் பிறகு, "மல்லிகா! நீயா உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்?" என்ற இனிய சொற்கள் அவளது செவிகளிற்பட்டன. அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள், எதிரில் வஸந்தராவ் சற்று தூரத்தில் வந்து நின்றார்.
"மனம்போல மாங்கலியம் என்று சொல்வது நிஜமாயிற்று. நான் உலாவும் பொருட்டு தற்செயலாக இங்கே வந்தேன். இது வரையில் நான் இந்த ஆற்றையும், இங்கே உள்ள சோலைகளையும் பார்த்ததே இல்லை. இன்று இவைகளைக் காண நிரம்பவும் மன மகிழ்ந்தேன். இந்தச் சமயத்தில் நீ இங்கே இல்லையேயென்றும், இருந்தால் அது எவ்வளவு ஆநந்தமாயிருக்குமென்றும் இப்போதே நான் நினைத்தேன். கடவுள் தன்னை நினைத்து தபசு செய்வோருக்கு முன் தோன்றி காட்சி கொடுப்பதுபோல நீ எனக்கு முன்னால் இங்கே வந்திருக்கிறாய்! தினந்தினம் இப்படி உடதுக்குடன் நீ தோன்றுவாயானால், உன்னை நான் தெய்வமாக மதித்துப் பூஜிப்பதற்குத் தடையென்ன?" என்று சொல்லிக்கொண்டே புன்சிரிப்போடு அவளிடம் நெருங்கினார். நெருங்கி மிகவும் அருகில் வந்து அவளை உற்று நோக்க, அவளது முகவாட்டம் நன்றாகத் தெரிந்தது. அதைக் கண்டு திடுக்கிட்டு ஜெமீந்தார், "கண்மணி! ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? ஏன் இப்படி விசனப்படுகிறாய்? உன்னுடைய மனசிலுள்ளதை என்னிடம் தெரிவிக்கலாகாதா? ஆகா! நீ இப்படி வருந்துவதைப் பார்க்க நான் எப்படி சகிப்பேன்? என் ஆருயிரே!