பெண்டாட்டிப்பித்து
81
"இல்லை இல்லை. நான் பார்த்தது நிஜம்" என்று பீமராவ் உறுதியாக மறுத்துக் கூறினான்.
அப்போது வாசற் கதவை யாரோ ஓங்கி இடித்த ஒசை கேட்டது, ஸ்காராம்ராவ் உடனே படத்தைப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு, பீமராவையும் உள்ளே அனுப்பியபின் கதவைத் திறந்தான். வஸந்தராவ் கலங்கிய மனத்தோடும் மாறிய முகத்தோடும் தடுமாற்றமடைந்த தோற்றத்தோடும் உள்ளே நுழைந்தார்.
மல்லிகா இறங்கியிருந்த வீட்டைவிட்டு இரகஸியமாகப் புறப்பட்டு வெளியிற் போய் ஒரு நாழிகைக்குப் பிறகு வஸந்தராவ் தமது காரியங்களை முடித்துக்கொண்டு திரும்பி வந்து சேர்ந்தார். தமது அருமைக் காதலியை விட்டு அவ்வளவு நேரம் பிரிந்திருந்ததைச் சகியாதவராய் அவளைப் பார்க்க ஆவல் கொண்டவராய் குதூகலமும் புன்சிரிப்பும் ஜ்வலித்த முகத்தோடு அவர் ஜாகைக்குள் நுழைந்தார்; கூடத்தில் அவளைக் காணாமையால், "மல்லிகா! மல்லிகா!" என்று அவளது பெயரைச் சொல்லி ஆவலுடன் ஒருதரம் அழைத்தார்; மறு மொழி இல்லை. ஒருகால் அவள் இரண்டாங்கட்டில் நீராடிக் கொண்டிருப்பாளோவென்று நினைத்து, சற்று நேரம் பொறுமையோடிருந்தார். பத்து நிமிஷ நேரம் கழிந்தது. பிறகு அவரது மனதில் ஒரு வகையான சந்தேகமும் அச்சமும் எழுந்து வதைக்க ஆரம்பித்தன. "மல்லிகா! மல்லிகா!" என்று அழைத்துக் கொண்டு அவர் இரண்டாங்கட்டிற்குள் போய் அறையறையாய் நுழைந்தார். அவள் எவ்விடத்திலும் காணப்படவில்லை. அவரது மனதில் பெருத்த குழப்பமும் அச்சமும் உண்டாயின. எவராகிலும் அவளை வஞ்சித்து அழைத்துக் கொண்டு போய்விட்டார்களோ அல்லது துக்கோஜிராவ் தேடிக்கொண்டு வந்து கண்டுபிடித்து அழைத்துப்போய் விட்டானோ அல்லது வேறு எவ்விதமான ஆபத்தில் அவள் அகப்பட்டுக் கொண்டாளோ என்று பலவாறு சிந்தித்து வருந்தித் திகைத்தவராய் சிறிது நேரம் மெளனமாக நின்றார். வேலைக்காரியைக் கேட்கலாமென்ற ஓர் எண்ணம் உண்டாக, அவர் உடனே விரைவாக வெளியிற் சென்று அடுத்த வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த வேலைக்காரியை அழைத்து தாம் வெளியிற் போயிருந்த காலத்தில் அந்த வீட்டிற்குள் எவராகிலும் வந்ததுண்டாவென்று கேட்டார்.வ.ம.-7