பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

107

ஆற்றில் அதிக வெள்ளப் பெருக்கில்லை. ஆற்றின் கரையில் உள்ள வயல்களைக் கடந்து தேர் செல்கையில் ஆங்காங்கு முற்றிய தானியக் கதிர்களைக் கொத்த வரும் பறவைகளின் மீது கவண் கற்கள் எறியும் உழவர் குடிப்பிள்ளைகளை அவள் பார்க்கிறாள். இவர்கள் தேரைப் பார்த்துவிட்டு ஆங்காங்கு தென்படும், சிறுவர்கள், பெண் மக்கள் வியப்புடன் கண்களை அகல விரிக்கிறார்கள்.

ஏய்... மகாராணி! மகாராணி ராஜா...!

நிலத்தில் வேலை செய்யும் பெண்கள் சரேலென்று மார்பு மறைய, தலை குனிகிறார்கள்.

“மகாராணிக்கு மங்களம்...”

அரவங்கள் மடிந்து போகின்றன. வானமே சல்லென்று கவிழ்ந்துவிட்டாற்போல், தோன்றுகிறது. ரொட்டி விள்ளலும் பாற் கஞ்சியும் நெஞ்சிலேயே குழம்புகின்றன. இத்தனை நேரமாகியும் இத்தனை குலுங்கலிலும் அது சீரணமாக ஏன் குடலுக்கு இறங்கவில்லை? அவள் புளிப்புக் காய்க்கு ஆசைப் பட்டபோது மரங்கள் பூக்கவில்லை. இப்போது பிஞ்சும் காயுமாக மரங்கள். பொன்னிறக் கனிகளைக் குரங்குகள் கடித்துப் போடுகின்றன.... அணில்கள் கண்களில் படவில்லை....

இளையவரும் சுமந்திரரும்கூடப் பேசவில்லை.

ஆற்றில் நீர் மிகக் குறைவாக இருக்கும் பக்கம் தேர்ச்சக்கரம் இறங்கிச் செல்கிறது. நடுவில் மணல் திட்டில் சக்கரம் புதைகிறது. இளையவர் இறங்கித் தள்ளுகிறார். பிறகு புல்லும் புதர்களும் உடைய இடங்கள். ஆறு கடந்து விட்டார்கள். எங்கே? எங்கே போகிறார்கள்? யாரோ எப்போதே கட்டிய மண்குடில்கள்; பிரிந்த கூரைகள். தேர் வருவதைக் கண்ணுற்ற வேடர்கள் சிலர் ஒடி வருகின்றனர். தேர் நிற்கவில்லை. அவர்கள் மேனி குறுக்கி, வாய் பொத்தி, தேருடன் விரைந்து தொடருகின்றனர். அந்திசாயும் நேரம். மாடுகளை மேய்த்துத் திரும்பும் சிறுவர் வியப்புடன் அவளையும் இளையவரையும் மாறி மாறிப் பார்க்கின்றனர். தேர்