பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

131


“இனி எல்லாரும் நலமடைவார்கள். நீ வாழ்க, சம்பூகா, உன் தொண்டு அரியது. நீ அருள் பெற்ற பாலகன்.

அவர்கள் உரையாடலில் பூமகள் மகிழ்ச்சியடைகிறாள்.

“சுவாமி, இந்தச் சிறுவன் வைத்தியனா?”

“இவன் அரண்யாணியின் அருள் பெற்றவன். எந்த நோயானாலும், இவன் மூலிகை கொண்டு சென்றாலே நோய் தீரும் மூலிகைக்கும் இவன் கைக்கும் ஒர் அரிய தொடர்பு உள்ளது: அமைதி கிடைக்கும்.”

“ஆச்சரியமாக இருக்கிறது கவாமி. இவன் பெயர். என்ன சொன்னிர்கள்?”

“சம்பூகன், மிதுனபுரியைச் சேர்ந்த வணிகர் வீட்டு வாயிலில் குழந்தையாகக் கிடந்தான். இவனைச் சத்திய முனி தளர்நடைப் பருவத்தில் கொண்டு வந்தார். யாரோ அந்தணர் பார்த்து, இந்தப் பிள்ளை முற்பிறவியில் பலரைக் கொன்று பாவத்தின் பயனாக வந்திருக்கிறான். இவனை உங்கள் வீட்டில் ஏற்றால் நாசம் வரும் என்றாராம் சத்திய முனிவர் எடுத்து வந்தார். வந்த புதிதில் பேச்சு வராது. செய்கையாகவே உலகம் அறிந்தான். இப்போதும் மிகக் குறைவாகவே பேசுவான்.

மனசுக்குள் கொக்கிபோல் வினா எழும்புகிறது.

குழந்தை பிறந்ததும் இப்படியும் சோதிடம் கூறுவரோ? அதற்காகப் பெற்ற பிள்ளையை அநாதையாக விடுவதோ? அழிவு என்றால், யாருக்கு எப்படி வரும்?

“சுவாமி சத்திய முனிவரை நான் பார்க்க வேண்டும். வணங்க வேண்டும்; ஆசி பெற வேண்டும்.”

படகில் ஆறு தாண்டி அவர்கள் கரையேறுகிறார்கள். வேடர்குலச் சிறுவர் சிறுமியர் சிலர் கண்டு சேதி சொல்ல ஒடிப்போகிறார்கள். இருள் இன்னமும் ஒளியைத் துடைத்து விழுங்கவில்லை.