பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

149

மோரியோ அவர்களைத் துக்கிச் சென்று விடுவார்கள். பெரியன்னைக்கு அந்த வட்டத்திலேயே பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று விருப்பம். பூமகள் இப்போதெல்லாம், ஒரு சாதாரணப் பெண்ணாக, பக்கத்தில் குளத்தில் இருந்து நீர் கொண்டுவருவதும், தானியம் குற்றுவதும், புடைப்பதும், வீட்டுத் தீக்குத் தேவையான பொருட்கள் சேகரிப்பதும் கன்று காலிகளைப் பேணுவதும், எல்லோருடனும் கூடி வாழ்வதும், பொருந்திவிட்டது. அவளுக்குத் தேவையான தானியங்கள் கனிகள், போதாத நேரங்களில் வேறு உணவு, எல்லாம் கொண்டு வருகிறார்கள். மிதுனபுரியில் இருந்து, நார் ஆடைகளோ, பஞ்சு நூலாடைகளோ வருகின்றன. அவளை ‘வனதேவி என்று தெய்வாம்சம் பொருந்திய தேவியாகப் போற்றுகின்றனர்.

ஈரம்பட்ட தானியத்தைக் கழுவி, ஒரு முறத்தில் போட்டு வைக்கிறாள். வானம் மூடுவதும் திறப்பதுமாக இருக்கிறது. மழைக்காலத்தின் இறுதி இன்னும் எட்டவில்லை. எப்போது வேண்டுமானாலும் கொட்டலாம். இங்கே சடங்கு செய்து அக்கினி மூட்டுபவர் இல்லை. அடுப்புச் சாம்பற்குவியலில் எப்போதும் நெருப்பைக் காப்பாற்ற வேண்டும். சாணத்தினால் செய்யப்பட்ட எரி முட்டைகள், சருகுகள், கள்ளிகள் ஆகியவற்றை மழை நாட்களில் பாதுகாப்பது மிகக்கடினம். காரியோ, மாரியோ கட்டை கடைந்தோ கல்லில் தீப்பொறி உண்டாக்கியோ அவளுக்கு உதவிகள் செய்வார்கள். இல்லையேல், லுவோ சோமாவோ, அவளுக்கும் அன்னைக்கும் எப்படியோ உணவு தயாரித்துக் கொடுக்கிறார்கள்.

பூச்சிகள் இழை கொண்டு தவக்கூடு படைக்கும். பின்னர் தவம் கலைய சிறகுடன் வெளிவரும்போது, அந்த இழைகளும் அறுந்து குலையும்.

அவற்றைப் பிள்ளைகள் சேகரித்து வருவார்கள் பெரியன்னை ஒரு தக்ளி'யில் அதைத் திரிப்பாள். அந்த வித்தையைப் பூமகளும் கற்று மிகவும் ஆர்வமுடன் நூல் திரிக்கிறாள். மிதுனபுரிச் சந்தைக்குப் பிள்ளைகள் அவற்றை எடுத்துச் செல்வார்கள்.