பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

வனதேவியின் மைந்தர்கள்

காதுகள். எலும்பு தெரியும் மார்பகம். நந்தமுனி திரித்து பட்டு நூலில் கோத்த ஒற்றை உருத்திராக்க மணி.

பூமகள், தன் நிலை இழந்து ‘மகனே’ என்று அவன் மீது விழுந்து கதறுகிறாள். அண்டமே குலுங்குவதுபோல் உயிர் களனைத்தும் துடிக்கின்றன. இந்தத் துடிப்பை, அந்த க்ஷத்திரிய மன்னன், அவள் நாயகன் உணர்ந்திருக்க மாட்டானா? அவன் என்ன கல்லா?

அப்படி மேற்குலம் மட்டுமே வாழவேண்டும் என்ற ஒரு தர்மம் உண்டா? இந்த உலகில் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவது தர்மம் என்றால், அந்த தர்மம் நிலைக்குமா?...

நந்தசாமி வருந்தித் துடிக்கும் அவள் தோள்பட்டையை மெல்லத் தொடுகிறார்.

“குழந்தாய், நீ வருந்தலாகாது. இந்த அநியாயம் நியாயமாகாது.”

“எந்தக் கொலைக்கும் நியாயம் கிடையாது. ஆறறிவு இல்லாத விலங்குகளுக்கு இயற்கை விதித்த கிரமப்படி இரையாகும் உயிர்களுக்கும் ஒரு நியதி இருக்கிறது. பசி இல்லாத போது, எந்த ஒரு விலங்கும் இன்னொரு விலங்குக்கு ஊறு செய்யாது.அதற்காக பழியும் வாங்காது... மகளே,தெம்பு கொள்...” சத்தியமுனி அவள் மைந்தர்களை அழைத்துக் கொண்டு வருகிறார். முதியவளும் மெள்ள நடந்து வருகிறாள்.

தங்கள் தாயின் வருத்தம் கண்ட மதலையர் அவளை மெல்ல வருடி, மழலை சிந்துகின்றனர்...

“சம்புகனுக்கு என்ன? ஏன் எல்லோரும் அழுகிறார்கள்?” அவள் இரு குழந்தைகளையும் அனைத்துக்கொண்டு கண்ணீர் பெருக முத்தமிடுகிறாள்.

“சம்பூகன் எழுந்திருக்க மாட்டான், கண்மணிகளே... அவன் பூதேவியுடன் ஐக்கியமாவான்...”

“ஏன்... ஏன்?...”