பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

191

"யாகம் செய்கிறார்களாம், யாகம்? யாகத்துக்குப் பொருட்கள் சேகரிக்கிறார்களாம். உன் தந்தை. தந்தை, ஒரு தடவை இங்கே வந்து இந்த மகளை, இந்தப் பேரப்பிள்ளைகளைக் காண வரவேண்டும் என்று நினைக்கவில்லையே அம்மா? ஏன்? ஏன்? தானியம் அனுப்புகிறான். யாருக்கு வேண்டும் இந்தத் தானியம், இந்தப் பட்டாடைகள்? கொண்டு உன் பிள்ளைகளை வேதவதியில் கொட்டச் சொல்.!”

“அம்மா..! அம்மா. அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். அவர் என்னை அந்தப் பிஞ்சுப் பருவத்தில் அன்னையைப் போல் மடியில் இருத்தி வளர்த்தவர். தாயும் தந்தையுமாகத் திகழ்ந்தவர்.”

“இருக்கலாமடி, பெண்ணே. உலகு பொறுக்காத ஒர் அநியாயம் உன்னை இங்கே கொண்டுவிட்டிருக்கிறதே? அதை ஏற்கிறானா அந்த மன்னன்? இப்போது, அவன் அசுவமேதம் செய்யப் போகிறானாம்! பத்தினி இல்லாத மன்னன், யாகம் செய்கிறானாம்! சத்தியங்களைக் கொன்ற பிறகு யாகம் என்ன யாகம்? எனக்கு நெஞ்சு கொதிக்குதடி, மகளே..” என்று அந்த அன்னை கதறுகிறாள்.

பிள்ளைகள், அந்திநேரத்துச் சூரியக் கொழுந்துகள் போல் நண்பர் புடைசூழ ஆர்ப்பரித்துக் கொண்டு வருகிறார்கள். கழுத்தில் கட்டிய மணிகள் அசைய கன்று காலிகள் வருகின்றன. மாதுலனின் இனிய குழலிசையின் ஒசை, துயரங்களைத் துடைக்கிறது.


20

தானிய மணிகளை உரலில் இருந்து எடுத்து, அஜயன் வாரி இறைக்கிறான். குருவிகள், மைனாக்கள், புறாக்கள், என்று பல வண்ணங்களில், செண்டுகட்டினாற்போன்று வந்து குந்தி அந்த மணிகளைக் கொத்துகின்றன. அவை மகிழ்ச்சியில் வெளியிடும் குரலொலியும் ஏதோ ஒர் இனிய ஒலிச் செண்டாக இன்ப மூட்டுகிறது.

“எத்தனை அழகான பறவைகள்! அம்மா! வந்து பாருங்கள்” அஜயன் தாயைக்கூவி அழைக்கும்போது, விஜயன் சிரிக்கிறான்.