பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

வனதேவியின் மைந்தர்கள்


அவர்கள் மூங்கிற் குழாய்களில் தேன் கொண்டு வரவில்லை. வெற்றுக்குழாய் கயிறு என்று சென்ற கோலத்திலேயே காட்சியளிக்கிறார்கள்.

‘வனதேவி. நாங்கள் ஒர் அதிசயம் பார்த்தோம்.’

மீசை அரும்பிவிட்ட பூவன், ஐம்பின்னல் போட்டிருக்கும் சிறுபிள்ளை, ரெங்கியின் மகளின் மகள், எல்லோரும் ஒரே குரலில், “குதிரை வந்திருக்குது. குதுரை...’ என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

இந்த வனங்களில் குதிரை என்ற பிராணி கிடையாது. அவர்கள் வரும் போதுகூட தேர்களில் காளைகள் கட்டி இழுப்பதாகவே சொல்லியிருக்கிறார்கள்.

‘மிதுனபுரியில் இருந்து வந்ததா?”

‘இல்லை வனதேவி! இது வெள்ளைக்குதிரை, பசுமாட்டை, காளையை விடப் பெரிசு. குச்சமாக. பெரிய வால்..” என்று இரண்டு கைகளை நீட்டி, நிமிர்த்தி சைகையாகவும் சொல் கிறார்கள். கழுத்தில் மணியாரம் போட்டிருக்கிறதாம். ஒரு பட்டுப் போர்வை போர்த்து, கால்களில் பொன் மின்ன அது நடந்து வருகிறதாம்.

தலையை அப்படியும் இப்படியும் ஆட்டி அது வருவதை சோமன் விவரிக்கிறான்.

“எங்கே வந்திருக்கிறது?”

“கிழக்கே. வேம்புவனம் தாண்டி மலை போல் மேடாக இருக்குமே, அங்கே தான் நாங்கள் பாறைத்தேன் எடுக்கப் போனோம். அங்கே ஆற்றுப் பக்கம் புல்தரையில் அது மேய்ந்து கொண்டிருந்தது.நாங்கள் கிட்டச் சென்று தொட்டுப்பாக்கலாம் என்று போனோமா? அது ஒர் உதை விட்டது. யாரு, இவன்தான்! பின்னே போய் சுகமாக உட்கார்ந்திட்டான்.” என்று பூவனைக் காட்டிச் சோமன் சிரிக்கிறான்.

‘இல்லை வனதேவி. அது என்னை விரட்ட வில்லை. அங்கே ஒரு குரங்கு வந்தது. அதை விரட்டியது. வனதேவி, அந்தக் குதிரை, ராசா வீட்டுக் குதிரையா?.” என்று பூவன் கேட்கிறான். அவள் கலவரமடைகிறாள்.