பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

வனதேவியின் மைந்தர்கள்

பானையில் நீர் கொதித்து கிழங்குகள் வேகும்போது ஓர் இனிய மணம் கமழ்கிறது.

“இந்த வேள்வி பயனுடையதாகட்டும்!

இந்த வேள்வி அழிவில் இருந்து உயிர்களைக் காக்கட்டும்!

இந்த வேள்வி தீய எண்ணங்களைப் பொசுக்கட்டும்!”

மனசுக்கு இதமாக இருக்கிறது.ஒன்றும் நேரவில்லை. குதிரை தானாக வந்தது; தானாகவே அது இந்த எல்லையை விட்டுப் போய்விட்டது. பிள்ளைகள் காலைப் பசியாறி வழக்கம்போல் நந்தமுனிவருடன் செல்கிறார்கள். பூமகளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதியவளை அழைத்துச் சென்று நீராட்டுகிறாள்.

“பெரியம்மா, அந்த அரசகுமாரனின் பெயர் கூடக் கேட்கவில்லை. ஆனால் அவன் ஊர்மிளையின் மகன் என்பதில் ஐயமேயில்லை. அந்தக் காதோரச் செம்மை, மோவாய், அகன்ற துருதுருத்த விழிகள் எல்லாம் அப்படியே இருக்கின்றன.”

“நீ வந்தவருக்கு விருந்து படைக்க நினைக்கிறாய், என் கண்ணம்மா! உனக்கு எத்தகைய மனசு அதை அந்த வாயில்லாக் குதிரைகூடப் புரிந்து கொண்டிருக்கிறது! முற்றத்தில் நின்று உன்னை வணங்கிவிட்டு, அது. ஓடிவிட்டது.”

“வெறுமே ஓடவில்லை. காவலனை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு ஓடிற்று.”

“அப்படியா? அட அறிவிலிகளா! இது வனதேவி வாசம் செய்யும் மங்கள பூமி. இங்கே உங்கள் கரிச்சுவடுகளைப் பதிக்காதீர்கள் என்று உதைத்து தள்ளிவிட்டுப் போயிருக்கும்.!”

சிறுவர்கள் அன்றிரவு, குடிலுக்குத் திரும்பவில்லை.

அடுத்தநாளும் திரும்பவில்லை. அவர்கள் அப்படி இருப்பது சாதாரணமான வழக்கம்தான். யாவாலி ஆசிரமத்தில் தங்கி விடுவார்கள். இந்த வனத்தில் அவர்கள் எங்கு திரிந்தாலும் அச்சமில்லை. ஆனால், இப்போது ஒரு முட்டு தடுக்கிறது. வேடுவர் குடியிருப்பின் பக்கம் கூட்டமாக இருக்கிறது.